குஜராத் சிறையில் இருக்கும் ரவுடியால் சல்மான் கானுக்கு ஆபத்து என்பதால் அவரின் படப்பிடிப்பு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நாயகன் சல்மான் கானுக்கு, குஜராத் சிறையில் இருக்கும் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சல்மானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இங்கு ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருக்கு அரசு கொடுத்த பாதுகாப்பையும் தாண்டி, சல்மான் கான் தரப்பில் தனியாக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவருக்கு 50லிருந்து 70 பேர் வரை பாதுகாப்பு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலிலும் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னரே ஆட்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.