5,000 கிராமப்புறத் தாய்மார்களுக்கு இலவசப் பட்டுப்புடவை: ராகவா லாரன்ஸ்

5,000 கிராமப்புறத் தாய்மார்களுக்கு இலவசப் பட்டுப்புடவை: ராகவா லாரன்ஸ்

கோப்புப் படம்: அந்திமழை

19 Oct 2026 - 9:24 pm

1 mins read

சென்னை: திரைப்பட நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், கிராமப்புற ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமாக பட்டுப்புடவைகள் வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

அவரது ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ இருபது ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பல்லாண்டுகளாகக் குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், அன்னதானம் எனப் பல்வேறு சமூகச் சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை செய்து வருகிறது.

இந்நிலையில், கிராமப்புற மக்களுக்கு உதவி செய்யச் சென்ற ஒரு தருணத்தில், ஏழைப் பெண் ஒருவர் தனக்கு ஒரு பட்டுப் புடவை வேண்டும் எனக் கோரி அவரிடம் கடிதம் அளித்துள்ளார்.

“கிராமப்புறங்களில் வாழும் பல தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு பட்டுப் புடவையைக்கூட அணிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தேன்.

“அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதற்கும் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் முதற்கட்டமாக 5,000 பட்டுப் புடவைகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

தனது பிறந்தநாளான அக்டோபர் 29 அன்று, தான் வளர்ந்த இடமான சென்னை ராயபுரத்தில் இந்தத் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்க உள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்