தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நட்பு காதலாக மாறியது: சாய் தன்ஷிகா

3 mins read
c5bf1fb8-7621-4e61-a0eb-05d7adcc0e8a
சாய் தன்ஷிகா. - படம்: ஊடகம்
multi-img1 of 3

நடிகர் விஷாலைக் கரம்பிடிக்கும் உற்சாகத்தில் வலம்வரும் தன்ஷிகா, திருமணத்துக்கு முன்பே, தாம் ஒப்புக்கொண்டுள்ள படங்களை நடித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

விஷாலும் தன்ஷிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், இதுவரை இவர்கள் இருவரையும் இணைத்து எந்தவிதமான கிசுகிசுக்களும் வந்ததில்லை. குறைந்தபட்சம், இருவரும் ஒரு படத்தில்கூட இணைந்து நடித்ததும் இல்லை. பிறகு எப்படி காதல்வயப்பட்டனர் என்றுதான் கோடம்பாக்க வட்டாரங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரைச் சேர்ந்த தன்ஷிகாவுக்கு, திரைத்துறையில் நடிகையாக வேண்டும் என்பதுதான் லட்சியம். இந்தக் கனவு நெனவாக தன்ஷிகாவுக்குத் துணை நின்றவர் அவரது மாமா அருண். பல திரையுலக கலைஞர்களிடம் மேலாளராகப் பணியாற்றிய அருணைப் பலரும் நன்கு அறிவர்.

கிராமத்தில் இருந்து சென்னை வந்த தன்ஷிகாவுக்கு நடனம், நடிப்பு, சிலம்பம், நீச்சல் பயிற்சிகளை அளித்து அவரை நிபுணத்துவம் வாய்ந்த நடிகை என்ற தகுதியுடன் கோடம்பாக்கத்தில் நடமாட வைத்தது அருண்தான்.

“கன்னடத்தில் ‘கேம்பா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தேன். பிறகு, தமிழில் ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ படம்தான் எனக்கு நட்சத்திர நடிகை என்ற மதிப்பைப் பெற்றுத் தந்தது.

“அதன் பின்னர் ‘அரவாண்’, ‘மாஞ்சா வேலு’, ‘பரதேசி’ எனப் பல படங்களில் நடித்ததால் ரசிகர்களுக்கு ஓரளவு அறிமுகமான நடிகையாக உருவானேன்.

“அனைத்துக்கும் உச்சமாக, ரஜினியின் மகளாக ‘கபாலி’ படத்தில் நடித்த பிறகுதான், உலக அளவில் ரசிகர்கள் கிடைத்தனர்,” என்கிறார் தன்ஷிகா.

இடையில் சில காலம் திரையுலகச் சந்தை மதிப்பு தொய்வு அடைந்ததால், உற்சாகம் குறைந்து ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார் தன்ஷிகா. ஒரு கட்டத்தில், சாய் பாபாவின் தீவிர பக்தையாக மாறியவர், தனது பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘விழித்திரு’ என்ற படத்தில் நடித்திருந்தார் தன்ஷிகா. அப்பட விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது சாய் தன்ஷிகா, தனது பெயரைக் குறிப்பிடாததால் கடும் கோபம் அடைந்த இயக்குநர் டி.ராஜேந்தர், அடுக்கு மொழியில் தன்ஷிகாவைத் திட்டித் தீர்த்தார்.

இதனால் மேடையிலேயே கண்ணீர் விட்டபோதிலும் ராஜேந்தர் ஏனோ தன்ஷிகாவை மன்னிக்கவில்லை.

இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில், தன்ஷிகாவைத் தொடர்புகொண்டு பேசினார் விஷால். பிறகு நேரிலும் சந்தித்து விஷால் ஆறுதல் கூற, நட்பு தொடங்கியது. ஒரு கட்டத்தில் அது காதலாகவும் மாறியது.

“அதற்கு முன்னதாகவே, விஷாலுக்கு ஒரு நடிகையைத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது பெற்றோர் முடிவெடுத்திருந்தனர். “விஷாலின் அண்ணனும் நடிகருமான அஜய் கிருஷ்ணா, ‘திமிர்’ பட நடிகை ஷ்ரேயா ரெட்டியைத் திருமணம் செய்துள்ளார்.

“பல நடிகைகளின் பெற்றோரிடம் விஷால் தரப்பு முறைப்படி பெண் கேட்டபோதும், எதுவும் கைகூடவில்லை. பின்னர் அனிதா ரெட்டி என்ற நடிகையுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அந்த வரனும் கைகூடாததால், கடும் மன உளைச்சலில் இருந்தார் விஷால்.

“இந்தச் சூழ்நிலையில்தான் சாய் தன்ஷிகாவைச் சந்தித்தார் விஷால். அண்மையில் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, விஷாலை அருகில் இருந்து கவனித்துக் கொண்டது சாய் தன்ஷிகாதான். அதன் பிறகுதான் இருவரும் காதலிப்பது வெளியே தெரிய வந்தது,” என்கிறார் விவரம் அறிந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்