விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‘ககன மார்கன்’.
அடுத்தடுத்து சில படங்களைக் கைவசம் வைத்திருந்தாலும், இந்தப் படம் குறித்து ரசிகர்களைப் போலவே விஜய் ஆண்டனிக்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் சமுத்திரக்கனி, பிரிகிடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜுன் மாதம் 27ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டக்காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, தாம் தொடர்ந்து சொந்தமாகப் படங்களைத் தயாரித்து வருவதால் தம்மிடம் அதிக பணம் இருப்பதாக ரசிகர்கள் நினைத்துவிடக் கூடாது என்றார். கடன் வாங்கித்தான் படம் தயாரிப்பதாகவும் வாங்கிய கடன் தொகைக்கு மாதந்தோறும் வட்டி உண்டு என்றும் குறிப்பிட்டார்.
“இப்படத்தின் இயக்குநர் லியோவை எனக்கு ‘பிச்சைக்காரன்’ படத்தொகுப்பு சமயத்தில் இருந்தே தெரியும். நான் செய்த தவற்றை அவர் செய்யக்கூடாது.
“நான் நடிக்க வந்த பிறகு இசையமைப்பதை நிறுத்திவிட்டேன். நீங்கள் படம் இயக்கினாலும், உங்களுடைய இயக்குநர்களுடன் இணைந்து படத்தொகுப்புப் பணியையும் செய்ய வேண்டும்.
“நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நிகழ்வுகள் சில இருக்கும். அந்த வகையில் ‘டிஷ்யூம்’ படத்தின் மூலமாக இயக்குநர் சசி சார் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“15 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலமாக என்னைக் கதாநாயகனாக நிறுத்தினார். இப்போது மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறேன்,” என்றார் விஜய் ஆண்டனி.
தாம் சாதி, மதம் ஆகியவை உலகத்தில் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்களில் ஒருவன் என்றும் தாம் பார்க்கும் அனைத்திலும் ஒரு நல்ல விஷயமும் எல்லா மனிதர்களிடமும் ஓர் ஆற்றல் இருப்பதாக நம்புகிறவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எல்லாருடைய நம்பிக்கைகளையும் நான் மதிப்பேன். ‘பிச்சைக்காரன்’, ‘சலீம்’ படங்களில் ஆன்மிக அம்சங்கள் தானாகவே வந்துவிட்டன.
இப்போது என்னுடைய அடுத்த படங்களுக்கு நானே இசையமைக்கிறேன். மேலும், மற்ற கதாநாயகர்களின் படங்களுக்கும் நான் இசையமைக்க உள்ளேன்,” என்று வெளிப்படையாகப் பேசினார் விஜய் ஆண்டனி.
இதுவரை தாம் நடித்த படங்களை, தான் மட்டுமே தயாரித்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு முதல் தமது பொருளியல் நிலைமைக்கு ஏற்ப, மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார்.
சரி, ‘ககன மார்கன்’ என்றால் என்ன?
“ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் இதற்கான விளக்கம் அளித்திருக்கிறோம். அனல் காற்று போல் குணம் கொண்ட கதாநாயகன், ஒரு மார்க்கமான கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறான் என்பது கதைச்சுருக்கம்.
“இது ஆசியாவின் ஆகச்சிறந்த அறிவியல் ரீதியிலான கற்பனைப் படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர் லியோ.
கொலை, மர்மம், குற்றச்செயல் உள்ள திகில் கதையாக உருவாக்கப்பட்டுள்ள படம் இது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மேலும், ஆசியாவுக்கான மருத்துவம், விஞ்ஞானம் ஆகியன தனித்தனி அம்சங்களுடன் உள்ளன என்றும் இதை விவரிக்கும் கோணத்தில்தான் கதை நகரும் என்றும் கூறுகின்றனர்.