கற்பனை, பிரம்மாண்டம், சாகசங்கள் நிறைந்த படம் ‘கஜானா’

2 mins read
d0d7b60f-3988-4c22-b8cb-1b0d670db3de
வேதிகா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் கற்பனையும் சாகசங்களும் (அட்வென்சர்) நிறைந்த படம் ‘கஜானா’.

இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இதில், திரையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தின் நாயகி வேதிகா பேசுகையில், இந்திய சினிமாவில் இப்படிப்பட்ட சாகசப் படம் இதுவரை உருவானதில்லை என்றார்.

“இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தை ஒற்றை வரியில் இயக்குநர் கூறியபோதே எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒரு ரசிகரின் கோணத்தில் இருந்து முழுக் கதையையும் கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது.

“ரசிகர்களுக்கு இந்தப் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். நான் இந்தப் படத்தில் ஒரு நடிகையாக பங்கேற்றாலும், ஒரு ரசிகையாக இந்தப் படத்தைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.

“இந்தப் படம் சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். துணிச்சலான முயற்சியை மேற்கொண்டுள்ள இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் பாராட்டுக்குரியவர்.

“இப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான், இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது அவ்வளவு எளிதல்ல,” என்றார் வேதிகா.

கதாநாயகன் இனிகோ பேசுகையில், இப்படத்தில் வேதிகா மிக அழகாக இருப்பார் என்றார்.

நாயகிக்கு இணையான வேடத்தில் நடித்துள்ள சாந்தினியையும் பாராட்ட அவர் மறக்கவில்லை.

“சாந்தினி நடித்திருக்கும் வேடத்தில், அவரைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது, படத்தின் இசையமைப்பாளர் அச்சு யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் படம் பார்க்கும்போது அவர் பெரிய கலைஞர் என்பது தெரிந்தது. அந்த அளவுக்கு பின்னணி இசையை பிரம்மாண்டமாக அமைத்துள்ளார்.

“நான் எந்தப் படத்தைப் பற்றியும் இவ்வளவு பேசியது இல்லை. ஆனால் இந்தப் படம் பேச வைத்திருக்கிறது. காரணம் அந்த அளவுக்கு தரமான படமாக உருவாகியுள்ளது.

“இரண்டாம் பாதியில் படம் விறுவிறுப்பாக இருக்கும், இதில் விலங்குகள் அதிகம் வருவதால் குழந்தைகளுக்கான படமாக மட்டும் நினைத்துவிடக் கூடாது. பெரியவர்களுக்கும் பிடிக்கும். அவர்களுக்கு ஏற்ற சாகசக் காட்சிகளும் உள்ளன,” என்றார் இனிகோ பிரபாகர்.

‘கஜானா’ படத்தில் யோகி பாபு, சாந்தினி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், சென்ட்ராயன் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இப்படம், வரும் மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

நடிகை சாந்தினி பேசுகையில், இந்த ஆண்டு நிறைய படங்களில் நடித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

‘கஜானா’ படத்தில் தாம் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது என்றாலும் அருமையான பாத்திரத்தை அளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

“கற்பனையுடன் கூடிய பிரம்மாண்டப் படைப்பை தரப்போகிறோம்.

“இந்தப் படத்தில் நிறைய சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் அச்சு சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார்.

“நான் வேதிகாவின் நடனத்திற்கு தீவிர ரசிகை. இந்த ஆண்டு குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வரவில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும். பெரியவர்களுக்கும் படம் பிடிக்கும்,” என்றார் சாந்தினி.

குறிப்புச் சொற்கள்