‘காந்தி கண்ணாடி’: ரஜினிக்காக எழுதிய கதையில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா

2 mins read
9f8ea263-f0e9-43f5-9a1d-1797c2a7b112
‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சின்னத்திரை மூலம் பிரபலம் அடைந்து வெள்ளித்திரையிலும் ஜொலிக்கத் தொடங்கி உள்ளார் பாலா. அவர் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’.

ஷெரிஃப் இயக்குகிறார். இவர் இயக்கிய முதல் படம் ‘ரணம் அறம் தவறேல்’. இது ஒரு திகில் படமாக உருவானதால் ஒருதரப்பு ரசிகர்களை மட்டுமே சென்றடைந்ததாகக் கூறுகிறார் ஷெரிஃப்.

எனவே, அனைத்து வகை ரசிகர்களுக்கான படமாக ‘காந்தி கண்ணாடி’யை உருவாக்குவதாகச் சொல்கிறார். நடிகர் ரஜினியை மனதிற்கொண்டுதான் இப்படத்தின் கதையை உருவாக்கினாராம். ஆனால், ரஜினி தன்னை வைத்து படம் இயக்க வாய்ப்பு அளிப்பது வெறும் கனவாகவே போய்விடும் எனக் கருதியதால், கதையை மாற்றாமல் பாலாவை கதை நாயகனாக மாற்றிவிட்டார்.

“பாலாவை சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அழைத்து வந்திருக்கிறேன். பாலாஜி சக்திவேல், மூத்த நடிகை ‘வீடு’ அர்ச்சனா ஆகியோரை வைத்து, மனத்துக்கு இதமளிக்கும் படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

“பாலாவை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். நான் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஒரு படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நான் இயக்குநரானால் அவரை வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று முன்பே பேசி வைத்திருந்தேன். அதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது.

“என் சிறு வயதில் தெருக்கூத்து கலையைக் கற்றுக்கொண்டேன். நாடகங்கள் போடுவது, பொம்மைத் தயாரிப்பு என்று காலம் கடந்தது. இத்தகைய கதாபாத்திரத்தில்தான் பாலா நடித்துள்ளார்.

“இந்தக் கதையை அவர் மிகவும் நம்புகிறார். இதைத் தனது முதல் படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவரே விரும்பி இந்தக் கதையில் நடித்துள்ளார்.

“வடசென்னைப் பகுதி இளையராக அவரது உழைப்பும் அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பும் திரையில் பிரதிபலிக்கும்போது பிரமித்துப் போவீர்கள். படத்தில் நடித்தோம், கிளம்பினோம் என்று இல்லாமல், படப்பிடிப்புக்குப் பின்னர் நடக்கும் தொழில்நுட்பப் பணிகளிலும்கூட ஈடுபாடு காட்டுகிறார். அவரிடம் இயல்பாகவே கதாநாயகனுக்குரிய பல்வேறு அம்சங்களும் இருக்கின்றன,” என்கிறார் ஷெரிஃப்.

இந்தப் படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருப்பதாகக் கூறுபவர், படத்தின் தலைப்புக்கும் மகாத்மா காந்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையெனத் தெளிவுபடுத்துகிறார்.

குறிப்புச் சொற்கள்