விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகிய மூவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
வசனம் இல்லாத மௌன படமாக உருவாகியுள்ள இப்படத்தை கிஷோர் பெலேகர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ‘காந்தி டாக்ஸ்’ படம் மிகச் சிறப்பான படைப்பு மட்டுமல்ல, வித்தியாசமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் நல்ல படம் என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக வெளியாகும் படங்களைப் போல் அல்லாமல், மௌன படமாக இருப்பதால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்ததாம். ஆனால், நெருக்கமான நண்பர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டியபோது அனைவருமே நல்லவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
“இத்தகைய கருத்துகள்தான் நமக்கு ஊக்கத்தையும் துணிச்சலையும் தரும். நண்பர்களின் ஆதரவான கருத்துகள் எங்களுக்கு நம்பிக்கையூட்டின.
“எல்லா படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பு தொடக்கத்தில் இந்தப் படத்துக்கும் இருந்தது. ஆனால், தற்போது படம் வெற்றி பெற வேண்டும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் படக்குழுவினரிடம் உள்ளது,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
‘காந்தி டாக்ஸ்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) வெளியாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே ஆதரவு படத்துக்கும் கிடைக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
முன்னதாக விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகிய மூவரும் மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
‘காந்தி டாக்ஸ்’ படத்தில் மூவருக்குமே உரிய முக்கியத்துவத்துடன் கூடிய கதாபாத்திரங்கள் அமைந்துள்ளதாம்.

