எழுபது வயதைக் கடந்த பிறகு திரையுலகில் நடிகராக அறிமுகமாவது அரிது. அதிலும் நல்ல திரைப்படங்களைத் தந்த இயக்குநர்களே நடிகராக மாறுவது இன்னும் வியப்பளிக்கும் தகவல்.
இந்த வியப்பை இரண்டு மாதங்களுக்கு மன்பு வெளியான ‘படை தலைவன்’ படத்தின் மூலம் ஏற்படுத்தினார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. கதைப்படி, இப்படத்தில் நாயகனாக நடித்த விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு கஸ்தூரி ராஜாதான் தந்தை. இப்போது இவருக்கு வயது 73.
இரு மகன்களும் தன்னைப் போலவே இயக்குநர்கள், நல்ல நடிகர்கள் என்று பெயரெடுத்த போதும், இதுவரை அப்பா கஸ்தூரி ராஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைத்ததில்லை.
இதற்கிடையே, தமிழில் சில படங்களை இயக்கியுள்ள கங்கை அமரனும் நடிகராகிவிட்டார். இசையமைப்பாளர், பாடகர், பின்னணிக் குரல் கலைஞர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவரை, இதற்கு முன்பு சில படங்களில் ஓரிரு காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், முதன்முறையாக ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில், தொடக்கம் முதல் இறுதிவரை வந்துபோகும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் கங்கை அமரன். நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் (ராம்குமார் மகன்) இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.
கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் தந்தைக்கு சமூக ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

