அனுமதி இல்லாமல் பாடலைப் பயன்படுத்தியதற்கு வழக்குத் தொடுக்காமல் பாராட்டிய நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் தற்பொழுது இப்படம் ஓடிடித் தளங்களில் வெளியாகியுள்ளது.
தியாகராஜனிடம், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் ‘மம்பட்டியான்’ பட பாடலை பயன்படுத்துவதற்கு உங்களிடம் அனுமதி கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தியாகராஜன், “அவர்கள் அனுமதி எல்லாம் வாங்கவில்லை. ஆனால், அந்தப் பாட்டு மீண்டும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் படக்குழுவை நான் வாழ்த்தினேன்.
“அந்தப் பாடலை அவர்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக பலரும் என்னிடம் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கச் சொன்னார்கள். மேலும் நஷ்ட ஈடு கேளுங்கள் என்றார்கள்.
“ஆனால் எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. அந்தப் பாடல் மறுபடியும் மக்களிடையே சென்றதற்கு நான்தான் காசு கொடுக்கணும்.
“பல ஆண்டுகள் கழித்து அந்தப் பாடல் மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது,” என்று கூறினார்.
அவரின் இந்த பெருந்தன்மையான பேச்சு பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.