மக்களின் மனத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே இலக்கு: சம்யுக்தா விஸ்வநாதன்‌

மக்களின் மனத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே இலக்கு: சம்யுக்தா விஸ்வநாதன்‌

2 mins read
1cab8b3f-509a-4d76-b25b-d1bbe3e32e88
சம்யுக்தா விஸ்வநாதன் - படம்: ஃபேஸ்புக்/சம்யுக்தா விஸ்வநாதன்
multi-img1 of 2

வழக்கமான திரையுலக முத்திரைகளை உடைக்க விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்‌.

அண்மையில் வெளியான ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்துள்ள சம்யுக்தா, முதல் படத்திலேயே தனது அழுத்தமான நடிப்பால் தடம் பதித்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

‘கச்சி சேரா’ என்ற ஒற்றைப் பாடல் சம்யுக்தாவைத் தென்னிந்தியாவில் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் இளையர்களின் கனவுக்கன்னி பட்டியலில் அவருக்கும் இடம் கிடைத்துவிட்டது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடிப்புத் துறையில் பட்டம் பெற்றுள்ள சம்யுக்தா, முறைப்படி ‘பாலே’ நடனம் கற்றவர்.

தனக்குக் கிடைத்த வெற்றி ஓர் இரவில் கிடைத்த வெற்றியன்று என்றும் இந்த வெற்றிக்குப் பின்னால் 10 ஆண்டுகால ஓயாத உழைப்பு நிறைந்துள்ளது என்றும் அண்மைய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தப் பாடல் தனக்குப் பாராட்டுகளையும் வெற்றிகளையும் தேடித்தந்தோ அதே பாடல்தான் சமூக ஊடகங்களில் தன்னைப்பற்றி எதிர்மறை விமர்சனங்களைப் பகிரவும் காரணமாக அமைந்தது என்கிறார்.

“எளிய நடன அசைவுகள் மூலம் நான் பிரபலமாகிவிட்டதாகப் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் எனது திறமைமீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனவே எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை.

“அடுத்ததாக, ‘ஆர்டிஎக்ஸ்’ பட இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் ‘ஐ எம் கேம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானேன். அதில் முன்னணி நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் மிஷ்கின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக அமைந்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“மேலும் ‘மிஸ்டர் பாரத்’, ‘டெக்சாஸ் டைகர்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளேன். பொதுவாகத் திரைநாயகிகளுக்குக் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே தரப்படுகின்றன. கவர்ச்சிக்கன்னி, கவர்ச்சி நாயகி என்பன போன்ற முத்திரைகளை நான் விரும்பவில்லை. ஒரு நடிகையாக எனது முழுமையான நடிப்பாற்றலை வெளிபாபடுத்த விரும்புகிறேன்.

மேலும், “திரைப்படங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டவை. எனவே, முக அடையாளத்தைத் தாண்டி, அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலம் மக்களின் மனத்தில் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பது எனது இலக்கு,” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் சம்யுக்தா விஸ்வநாதன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்