விஜய்யின் ‘கோட்’ படத்தில் நடித்திருக்கும் இளம் நாயகியான மீனாட்சி சௌத்ரி, 27, ஒரு காலத்தில் பல் மருத்துவராகக் கனவு கண்டார். அதை நனவாக்க, பல் மருத்துவத்தில் இவர் இளநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
2018ல் நடந்த ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் இரண்டாம் நிலையில் வந்த இவர், பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மருத்துவப் பள்ளியில் மூன்றாமாண்டு பயின்றபோது தமது வாழ்க்கை மாறியதை ‘டெக்கான் கிரானிக்கல்’ ஊடகத்திடம் மீனாட்சி மனந்திறந்தார்.
“பல் மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தபோது மிஸ் இந்தியா போட்டிக்குத் தேர்வாக நான் முயற்சி செய்தேன். அத்துறையில் சேர்வது எனது சிறுவயது கனவாக இருந்தது. பள்ளியில் எனது புறப்பாட நடவடிக்கைகள் மூலம் மாடலிங்கில் சேர்வதற்கான ஆர்வம் அதிகரித்தது,” என 2020ல் மீனாட்சி பகிர்ந்திருந்தார்.
“அரசு ஊழியர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனவே, கேளிக்கைத் துறை குறித்து எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. என்றாலும், கேமரா முன் காட்சி தருவதற்கான ஆர்வத்தை நான் படிப்படியாக ஏற்படுத்திக்கொண்டேன்.
“அதன் பொருட்டு, எனது ஏட்டுக்கல்விக் கடமைகளுடன் சேர்த்து மாடலிங் வேலையிலும் நான் இறங்கினேன்,” என்றார் ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி.
அழகிப் போட்டியில் இவர் வென்ற பட்டம், பல்வேறு வாய்ப்புகளுக்கு கதவுகளைத் திறந்துவிட்டது. ‘அவுட் ஆஃப் லவ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் திரைத்துறையில் இவர் அறிமுகமானார்.
பிறகு மூன்று தெலுங்குப் படங்களில் நடித்த மீனாட்சி, விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அடுத்ததாக ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்திலும் ஒப்பந்தமான நிலையில், மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
‘கில்லாடி’, ‘ஹிட்’ படங்களிலும் நடித்துள்ள மீனாட்சி, ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் திரைத்துறையில் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார். தான் விஜய்யின் தீவிர ரசிகை என்று இவரே பேட்டி ஒன்றில் கூறுவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்தது.
மீனாட்சியின் காலஞ்சென்ற தந்தை பி.ஆர்.சௌத்ரி, இந்திய ராணுவத்தில் கர்னல் பதவி வகித்தவர். மீனாட்சி, தேசிய பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மாணவியாவார்.