நெடிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியுள்ளது ‘கோட்’ திரைப்படம்.
சிங்கப்பூரில் காலை 6.30 மணிக்கு வெளியான இத்திரைப்படத்தைக் காண விஜய் ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே வரிசைகட்டி நிற்கத் தொடங்கினர். ஆட்டம், ஆரவாரம் எனக் கொண்டாடக் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது வெங்கட் பிரபுவின் ‘கோட்’.
நாட்டுக்குத் துரோகமிழைத்த வில்லனைத் துரத்திப்பிடிக்கும் ‘பயங்கரவாத எதிர்ப்புப் படை’ வீரன்தான் கதாநாயகன். அவருக்கு உதவும் உற்ற நண்பர்கள், இவை குறித்து ஏதுமறியாத நாயகனின் மனைவி; நாயகனின் உற்றார் உறவினரைக் கொல்லும் வில்லன்; இப்படி கோலிவுட்டில் ஊறிப்போன கதைதான் என்றாலும், அதனைக் கண்ணிமைக்காமல் பார்க்கும் வண்ணம் கவனமாகச் செதுக்கியுள்ளார் இயக்குநர்.
தந்தை விஜய்யின் ‘மாஸ்’, மகன் விஜய்யின் குறும்புத்தனம் இரண்டுமே ரசிக்க வைத்தன. சில சண்டைக் காட்சிகள் நீளமாக இருந்தாலும், ஆங்காங்கே உள்ள திருப்பங்கள் ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தன.
மகன் விஜய்யின் தோற்றம், கிண்டல் பேச்சு, உடல் அசைவுகள், சண்டை பாணி அனைத்தும் துள்ளலாக இருந்தது கூடுதல் சிறப்பு.
இரு வேறு துருவங்களில் அமைந்த கதாபாத்திரங்களின் வேறுபாட்டை போகிற போக்கில் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் விஜய். எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடித்து இரண்டையும் ரசிக்க வைப்பது வெகு சில நடிகர்களுக்கே சாத்தியம். அந்தப் பட்டியலில் விஜய் இடம்பிடித்துள்ளார்.
பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ‘மைக்’ மோகன் என 90களின் பிரபல நட்சத்திரங்கள் அவரவர் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். சிறிது நேரமே வந்தாலும் சிரிப்பை வரவழைக்கிறார் பிரேம்ஜி.
தாய்லாந்துக் காட்சிகள், விஜய்யின் வாகன எண்ணை ‘சி எம் 2026’ என்று வைத்தது, சிவகார்த்திகேயன் ‘நீங்க இத விட முக்கியமான வேலைக்கு போறீங்க, இதை நான் பாத்துக்கறேன்’ என்று சொல்வது, விஜய் தம் மகளிடம் ‘நீ யார் ஃபேன்’ என்று கேட்க ‘தல’ என்று மகள் சொல்வது போன்ற வெங்கட் பிரபுவின் சேட்டைகளுக்குத் திரையரங்கமே அதிர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு விறுவிறுப்பான கதைக்குள் காதல், கணவன் மனைவியின் குறும்பான உறவு, சோகம், துரோகம், நட்பு, கலகலப்பு என அனைத்து உணர்வுகளையும் தூவியிருப்பது படத்தை முழுமையாக்கியுள்ளது.
பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று சிலர் கூறினாலும், படம் நெடுக விஜய் பாடும் பாடல் வரிகள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தன. ‘காதலின் தீபம் ஒன்று’, ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல’, ‘மருதமலை மாமணியே’ உள்ளிட்ட பல பாடல்களை அவருக்கே உரிய பாணியில் விஜய் பாடுவது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
செயற்கை நுண்ணறிவின் துணையில் கொண்டு வரப்பட்ட விஜயகாந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் ஆட்டம் போன்ற பலருக்கும் விருப்பமான அம்சங்களை படத்தின் கதைக்கு பங்கம் விளைவிக்காமல் சேர்த்திருப்பது ரசிக்க வைத்தது.
சில காட்சிகள் முன்பே கசிந்திருந்தாலும், திரையில் அவற்றைப் பார்ப்பது சிறந்த அனுபவம்.
“நான் பிற்பகலில் வெளிநாடு செல்லவிருந்தாலும் கோட் திரைப்படத்தின் முதல் காட்சியைக் காண வந்தேன்,” என்றார் திரைப்படத்தின் முதல் காட்சியைக் காணவந்த கார்த்திகேஸ்வரன், 26.
“படம் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. முதல் பாதியைவிட இரண்டாவது பாதி, குறிப்பாகக் கடைசி 40 நிமிடங்கள், நன்றாக இருந்தன. விஜய் நன்றாக நடித்திருந்தார். இசையும் நன்றாக இருந்தது,” என்றார் முதல் காட்சியைக் கண்ட விதுன்.