தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கடவுளே அஜித்தே’ கோஷம்: பொங்கி எழுந்த அஜித்

3 mins read
425efad2-d647-4425-982e-8e4b60d76d11
பத்துமலை முருகன் கோயில் வெளியே அஜித் நிற்கும் காட்சி. - படம்: ஊடகம்

பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என ரசிகர்கள் கூச்சலிடுவது தன்னை கவலையடையச் செய்திருப்பதாகவும், தனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது ‘விடா முயற்சி’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவை இரண்டும் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமார் பொதுவாகவே கார் பந்தயம், பைக் பந்தயத்தில் ஆர்வமிக்கவர் ஆவார். பல்வேறு காயங்களில் இருந்தும், அறுவை சிகிச்சைகளில் இருந்தும் மீண்டு வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் தற்போது திரைப்படங்களில் மட்டுமின்றி கார் பந்தயத்திலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை உருவாக்கி தற்போது உலகளவில் பல்வேறு கார் பந்தயங்களில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

இரு ஆண்டுகளாக வெளியாகாத திரைப்படம்

அண்மையில் அவர் ஸ்பெயினில் ஒரு கார் பந்தயத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார். அதன் புகைப்படங்கள், காணொளிகள் இணையத்தில் பரவின.

இதற்கு மத்தியில் அவர் திரைப்பட வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இறுதியாக அஜித் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ‘துணிவு’ திரைப்படம் வெளியானது.

அதன்பின், விக்னேஷ் சிவன் உடனான திரைப்படம் தடைப்பட அதே லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனியுடன் ‘விடாமுயற்சி’ படத்தில் ஒப்பந்தமானார்.

‘விடாமுயற்சி’ படமும் நீண்ட காலமாக வெளியாகாமல் இருப்பதால் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. அதன் மத்தியில் சில நாள்களுக்கு முன்னர்தான் அது பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு மத்தியில் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலம் குன்றியதால் சில நாள்கள் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து மீண்டு வந்த அஜித் ‘விடாமுயற்சி’ படத்தின் பணிகளை முடித்து இருக்கிறார்.

அஜித் திடீர் அறிக்கை

இதற்கிடையே, நடிகர் அஜித் குமார் தரப்பில் தற்போது அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அஜித் குமாரின் அறிக்கையில், “அண்மையில் முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க.... அஜித்தே’ என்ற இந்தக் கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த அடைமொழியையும் சேர்த்து அழைக்கப்படுவதை நான் துளியும் விரும்பவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

“எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தச் செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

“யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்,” என குறிப்பிட்டுள்ளார்.

கடவுளே அஜித்தே கோஷம் உருவானது எப்படி?

‘கடவுளே அஜித்தே’ என்பது இணையத்தில் தொடங்கி தற்போது உள்நாடு, வெளிநாடு என பல பொது இடங்களில் ரசிகர்களால் இஷ்டத்திற்கு எழுப்பப்படும் கோஷமாக மாறிவிட்டது.

சம்பந்தமே இல்லாத இடத்தில் கூட ஒரு சிலர் ஒன்றாக இணைந்து உரத்த குரலில் ‘கடவுளே அஜித்தே’ என கோஷமிடுகின்றனர். இதை இணையத்திலும் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர்.

முதன்முதலில், ஒரு உணவகத்தில் கொத்து புரோட்டா போடும் சத்தத்தை அடிப்படையாக வைத்து ரசிகர்கள் உருவாக்கிய கோஷமே ‘அஜித்தே...’. இது நாளடைவில் கடவுளே அஜித்தே என மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஅஜித்