தாம் அதிக சம்பளம் வாங்குவதாகவும் பண விஷயத்தில் கறாராக இருப்பதாகவும் எழுந்துள்ள விமர்சனத்துக்கு யோகி பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் ‘கஜானா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா, “இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபு இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஒருவேளை ஏழு லட்ச ரூபாய் கொடுத்திருந்தால் வந்திருப்பார்,” என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பேசிய யோகி பாபு, தாம் எப்போதும் தமக்கு உதவியவர்களை மறந்தது இல்லை என்றார்.
“என் ஊதியம் எவ்வளவு என்பது எனக்கே தெரியாது. நான் அதை முடிவு செய்வதில்லை.
“திரையுலகத்துக்கு வெளியே இருப்பவர்கள்தான் அதை முடிவு செய்கிறார்கள். ஊதியம் என்ன என முடிவு செய்பவர்கள் நடித்ததற்குப் பிறகு அதைச் சரியாகக் கொடுத்துவிட்டால் போதும். அதைக் கேட்டால்தான் இங்கு எதிரியாகிவிடுகிறோம்.
“எனக்கு எவ்வளவு பேர் பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா? என்னிடம் பெரிய பட்டியலே இருக்கிறது. எனவே தவறாகப் பேசாதீர்கள்.
“பேசுபவர்கள் பேசட்டும். கடவுள் பார்த்துக்கொள்வார்,” என்றார் யோகி பாபு.

