தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதனின் மூன்று குணங்களை விவரிக்கும் ‘குட் பேட் அக்லி’

3 mins read
045e9483-ddf9-454a-8a18-48e226ed8593
அஜித். - படம்: ஊடகம்

அஜித் ரசிகர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாட்டமாக இருக்கும். காரணம், அன்றுதான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகிறது.

“நம்மில் அனைவருக்குள்ளும் நல்லது, கெட்டது, அசிங்கமானது என மூன்று வகை குணங்கள் உள்ளன. அவை மூன்றும் வெளிவர சமயம் பார்த்துக் காத்திருக்கும். எந்த நேரம், எப்படி வெளிவரும் என்பதுதான் முக்கியம். அதுதான் இந்தப் படம்,” என்று முன்னுரை கொடுக்கிறார் ஆதிக்.

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்மைக் காலமாக அஜித் ரசிகர்கள் அவரை ‘சினிமா போராளி’ என சமூக ஊடகங்களில் குறிப்பிடத் தொடங்கி உள்ளனர். காரணம், தமிழ் சினிமா உலகத்தின் வெற்றியாளர் பட்டியலில் இடம்பெற அவர் தந்துள்ள உழைப்பு அப்படிப்பட்டது. இந்தப் படத்தில் அவர் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

“அஜித் சாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் உருவான சமயத்தில்தான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பின்போது அவரிடம் பலரும் நன்றாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் அவரையே கண் இமைக்காமல் ரசிப்பேன்.

“பத்து நாள்களுக்குப் பிறகுதான் அவரிடம் பேசத் தொடங்கினேன். ‘உன்னிடம் நல்ல திறமை இருக்கிறது. உன்னால் நல்ல படைப்புகளைத் தர முடியும். நாம் கண்டிப்பாக இணைந்து ஒரு படம் பண்ணலாம்’ என்று அவர் அப்போது கூறியது, எனக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இன்று அவரை வைத்து படம் இயக்க அவரே அமைத்துக் கொடுத்த முதல் படி அந்தத் தருணம்தான்,” என்கிறார் ஆதிக்.

‘குட் பேட் அக்லி’ படத்தின் திரைக்கதைக்கான முதல் புள்ளி எப்படி உருவானது என்பதையும் விகடன் ஊடகத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ஆதிக் விவரித்துள்ளார்.

படத் தலைப்பைக் கூறியதும், ‘அருமையாக இருக்கிறது’ என்று அவர் சொன்னதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் உற்சாகமாகிவிட்டனராம்.

இந்தப் படத்தில் அஜித்தின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக, புதுவிதமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் ரசிகர்கள். இதற்கு அஜித் ஒரு படத்தின் கதையை அணுகும் விதம்தான் காரணம் என்பது ஆதிக்கின் கருத்து.

“இதற்கு முன்பு ‘பில்லா’, ‘தீனா’ படங்களில் அவர் மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். அவர் எப்போதுமே தன்னை ஒரு பெரிய திரை நட்சத்திரமாகக் கருதுவதில்லை. சாதாரண நடிகராகத்தான் இருப்பார்.

“ஒரு கதைக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்க ஆயிரம் விழுக்காடு அதிகம் உழைப்பார். நம்முடைய உழைப்பையும் கருத்துகளையும் மதிப்பார். ‘குட் பேட் அக்லி’ என மூன்று விதமாக அஜித் இருப்பதாகச் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

“இந்த உலகம் ‘குட்’டாக இருக்கும்போது நாமும் ‘குட்’டாக இருக்கலாம். உலகம் ‘பேட்’ ஆக இருந்தால் நாம் ‘அக்லி’ ஆகத்தான் இருக்க வேண்டியிருக்கும். இதுதான் இப்படத்தின் கதைக்கரு. இதை வைத்துத்தான் கதை பயணமாகிறது.

“அவரை எப்படியெல்லாம் திரையில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேனோ, அதில் கொஞ்சம் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

“குறிப்பாக, ‘ஃபிளாஷ் பேக்’ பகுதியில் அஜித்தின் தோற்றம் உள்ளிட்ட அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். மற்ற தகவல்களைப் படத்தைப் பார்க்கும்போது தெரிந்து, கொள்வதுதான் நல்லது,” என்று ஆதிக் கூறியுள்ளார்.

அண்மைக் காலமாக அஜித் படங்களில் இடம்பெறும் சில தத்துவார்த்தமான வசனங்கள் சிலவற்றை இதிலும் எதிர்பார்க்கலாம். ஆனால், அது திணிக்கப்பட்டதாக இருக்காது.

“என்னை முந்திக்கொண்டு ‘விடா முயற்சி’ படப்பிடிப்பின்போதே திரிஷாவிடம் ‘குட் பேட் அக்லி’ கதையை விவரித்துவிட்டார் அஜித். திரிஷாவும் உடனே நடிக்க சம்மதித்தார். நடிகர் பிரசன்னாவின் கதாபாத்திரமும் தனித்துவமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

“கிரீடம்’ படத்திற்குப் பிறகு அஜித்துடன் இணைந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அஜித் நடனத்துடன் கூடிய பாடல் காட்சிகள் ரசிகர்களை விசிலடிக்க வைக்கும்,” என்று அப்பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் ஆதிக்.

குறிப்புச் சொற்கள்