பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ‘சட்டென்று மாறுது வானிலை’ படம் மூலம், இயக்குநராகி உள்ளார் பாபு விஜய்.
ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
‘சர்கார்’ படத்தில் பணியாற்றியபோது நடிகர் விஜய்யுடன் ஏற்பட்ட பழக்கத்தால், அவரிடம் தாம் உருவாக்கிய கதையைச் சொன்னாராம். கதை நன்றாக இருப்பதாகப் பாராட்டிய விஜய், தனது சம்பளத்துக்கு ஏற்ற கதையாக இல்லை என்று கூறிவிட்டாராம்.
“பிறகு ஏன் என்னை அழைத்து கதையைக் கேட்டீர்கள்? என நீங்கள் நினைக்கலாம். ஒரு கதையை எப்படி கையாளப் போகிறீர்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்பினேன். உங்களிடம் திறமை உள்ளது. வேறு ஒரு நாயகனை வைத்து, ஒரு திரைப்படம் இயக்கிய பின்னர் என்னிடம் வாருங்கள் என்றார் விஜய். அதுதான் அவருடைய மனது,” என்கிறார் இயக்குநர் பாபு விஜய்.
‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு வருகிறார்.
“ஜெய்யின் நடிப்பைக் கண்டு எப்போதுமே வியந்திருக்கிறேன். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
“மணிரத்னம் படத்தில் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, ரசிக்கும் வகையில் ஒரு காதல் இருக்கும். சுந்தர்.சி. படங்களில் நகைச்சுவை இருக்கும். முருகதாஸ் படங்களில் சமூக அக்கறையைக் காணலாம். இந்த அம்சங்களை ஒருசேர என் படத்தில் பார்க்கலாம். மற்றவர்களின் துயரத்தை உணர்ந்த ஒருவன் தன் அனுபவங்களிடமிருந்து உண்டாக்கிக் கொண்ட நியாயம்தான் இந்தக் கதை,” என்கிறார் பாபு விஜய்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துத்தான் கதாநாயகி மீனாட்சியைத் தேர்வு செய்தாராம்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் ஊதியம் வாங்காமலேயே பணியாற்றி உள்ளார்.

