அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேபி & பேபி’.
மேலும் யோகி பாபு, சத்யராஜ், நடிகை கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
வரும் 15ஆம் தேதி வெளியீடு காண உள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜெய், இப்படத்தின் கதையைத் தம்மிடம் இயக்குநர் விவரித்த பிறகு நடிக்க ஒப்புக்கொண்டதற்கு மூன்று பேர் முக்கியக் காரணம் என்றார்.
“சத்யராஜ், டி.இமான், யோகி பாபு ஆகிய மூன்று பேருமே நல்ல கதை இருந்தால்தான் நடிக்க முன்வருவார்கள் எனத் தெரியும். எனவே கதை குறித்து நான் தனியாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
“இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நான் நோன்பு கடைப்பிடித்தேன். எனினும், எனக்கு எந்தவிதச் சிரமமும் ஏற்படவில்லை. சுற்றி இருந்தவர்களில் சிலர் செய்த நகைச்சுவையான விஷயங்களைப் பார்த்து வயிறு குலுங்கி சிரித்ததால் வயிற்று வலிதான் ஏற்பட்டது.
“இயக்குநர் பிரதாப் மிகவும் திறமையானவர். நமக்கு ஏற்றார்போல் வசனங்களை மாற்றிக்கொள்ளலாமா என்று கேட்டால், உடனே சரியென்று கூறிவிடுவார். ஆனால் மூன்றாவது ‘டேக்’ எடுக்கும்போது அவர் என்ன கேட்டாரோ அந்த வசனத்தைத்தான் நம்மையும் அறியாமல் பேசி இருப்போம்.
“படப்பிடிப்புக்குச் சென்றபோது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நடிகர்கள் இருந்தார்கள். நாம் ஒரே படத்தில்தான் நடிக்கிறோமா என்று மனத்தில் சந்தேகம் எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
“குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு இந்த நடிகர், நடிகையர்தான் பொருத்தமாக இருப்பார்கள் எனக் கச்சிதமாகத் தேர்வு செய்திருந்தார்.
“திரையரங்குக்குப் படம் பார்க்கச் சென்றால் எந்தப் பாரத்தையும் மனத்தில் ஏற்றிக்கொள்ளாமல் ஏற்கெனவே உள்ள பாரத்தை இறக்கி வைத்துவிட்டு வருவதற்கு இந்தப் படம் உதவும்,” என்றார் ஜெய்.
முன்னதாகப் பேசிய நடிகர் யோகி பாபு, இயக்குநர் பிரதாப் தனது நெருங்கிய நண்பர் என்றும் 18 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒரு படத்தில் காட்டுவாசிகளாக நடித்திருந்த அனுபவம் உள்ளது என்றும் கூறினார்.
“சென்னையில் ஒரே வாடகை அறையில் இருவரும் தங்கியபடி வாய்ப்புகளைத் தேடினோம். நான் ஏதோ சின்ன நகைச்சுவை நடிகனாகி விட்டேன். அவர் இப்போது இயக்குநராகி விட்டார்.
“லட்சியம்தான் வாழ்க்கையில் நம்மை வெற்றி பெற வைக்கும். அதற்கு உதாரணமாக இருக்கும் இயக்குநர் பிரதாப்புக்கு வாழ்த்துகள்,” என்றார் யோகிபாபு.
படப்பிடிப்பின்போது ஜெய்யின் இளமை ரகசியம் குறித்து கேட்டாராம். இன்னும் திருமணம் செய்யாமல் தனித்து வாழ்வதுதான் அதற்குக் காரணம் என்று ஜெய் கூறினாராம்.
“சார் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள். இந்தப்படம் மிக நன்றாக உருவாகி உள்ளது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்றார் யோகி பாபு.
நடிகர் சத்யராஜ் பேசும்போது அஜித், விஜய் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தனாதான் இந்தப்படத்தில் தனக்கும் ஜோடியாக நடித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
“எனவே நான் இன்னும் இளைஞனாக இருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் என்னுடன் நடிப்பது குறித்து கீர்த்தனா என்ன நினைக்கிறார் என்பதுதான் தெரியவில்லை,” என்று சத்யராஜ் குறிப்பிட்டபோது அரங்கில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
“ஜெய்க்குத் திருமணமாகவில்லை என்று இன்றுதான் எனக்குத் தெரியும். அவரிடம் பிறகு பேசுவேன். ‘மதகஜராஜா’, ‘குடும்பஸ்தன்’ போன்ற படங்கள் வெற்றியடைந்திருப்பதைப் பார்க்கும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது.
“படத்துக்குப் படம் ரத்தம், சண்டை எனப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன ரசிகர்கள் புதிய கதைக்களத்துடன் நகைச்சுவை உணர்வுடன் தயாரான படங்களை வெற்றிபெற வைக்கிறார்கள். அதுபோன்றதொரு படம்தான் ‘பேபி & பேபி’.
“இந்தப் படத்தின் வெற்றிக்காக நானும், ஜெய்யும் காத்திருக்கிறோம்,” என்றார் சத்யராஜ். இசை வெளியீட்டு விழாவின் நாயகனான டி.இமான் பேசும்போது, இப்படத்தின் தலைப்பில் தமக்கு இசை வள்ளல் என்று பட்டம் கொடுக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“இந்தப் பட்டம் எனக்கு கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிகிறது. எனினும் தயாரிப்பாளரின் பேரன்பால் இது நிகழ்ந்துள்ளது. படப்பிடிப்பு தொடங்கியபோது இப்படக்குழுவினர் எவ்வாறு உற்சாகமாக இருந்தார்களோ, அதே உற்சாகத்தை படத்தை முழுமையாக முடித்து பின்னணி இசை சேர்க்கும் வரை அவர்களிடம் காண முடிந்தது,” என்றார் டி.இமான்.