திரையுலகில் எனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க எவ்வளவு கடினமாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். சவாலான ‘ஆக்ஷன்’ கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் எப்போதும் விரும்புகிறேன் என்று நடிகை பிரீத்தி முகுந்தன் தனது தற்போதைய நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.
முறையாகப் பரதநாட்டியமும் மேற்கத்திய நடனமும் கற்றுத் தேர்ந்த இவர், எதிர்காலத்தில் ஒரு முழுநீள நடனப் பின்னணி கொண்ட (Dance-centric) திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்பதைத் தனது தணியாத ஆசையாகக் கொண்டிருந்தாலும், தற்போதைய சூழலில் பான்-இந்திய அளவில் ஒரு ‘ஆக்ஷன்’ நாயகியாகவும் தனது அசுர வேகப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரீத்தி முகுந்தனிடம், ரசிகர்கள் அவரது அழகின் ரகசியம் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “என் அழகுக்கான ரகசியம் மிகவும் எளிமையானது. நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஆகியவையே என் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்.
“எப்போதும் தூக்கத்தை இழக்காதீர்கள். போதுமான தூக்கம் இல்லையென்றால் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மனநிம்மதியும் இருக்காது. நல்ல வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம்,” என்று அனைவருக்கும் பயனுள்ள அழகுக் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
அவரது இந்த எளிய குறிப்புகள் தற்போது சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்று வருகின்றன.
‘மாடலிங்’ துறையில் காலடி எடுத்து வைத்து, இன்று பாலிவுட் வரை தடம் பதித்து கோலிவுட்டின் பலதரப்பட்ட ரசிகர்களால் விரும்பப்படும் நாயகியாக வளர்ந்துள்ளார் பிரீத்தி.
திருச்சியில் பொறியியல் படிப்பை முடித்த இவர், ‘ஆசை கூட’, ‘மோர்னி’ போன்ற உலகளாவிய இசைக் காணொளிகள்மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
தொடர்ந்து, கவின் ஜோடியாக ‘ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
ஆரம்பத்தில் தெலுங்கு, பான்-இந்தியப் படமான ‘கண்ணப்பா’ ஆகியவற்றில் நடித்திருந்தாலும் இவருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.
ஆனால், அண்மையில் வெளியான அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
எந்தக் காதல் காட்சிகளும் இல்லாமல் முழுக்க முழுக்கச் சண்டைக்காட்சிகளில் மட்டுமே பிரீத்தி காட்டிய அதிரடி நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது.
வெறும் ரூ. 18 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 76 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் இமாலய சாதனை படைத்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் இவரை ‘ஆக்ஷன் குயின்’ என்றும் பாராட்டி வருகின்றனர்.
“பிளாஸ்ட்’ படத்திற்குப் பிறகு என்னைத் தேடி நிறைய சண்டைக் கதைகள் வருகின்றன. அதிரடிப் படங்களில் நடிக்க எனக்கும் மிகவும் ஆசை. ஆனால், ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்துடனும் புதிய அனுபவத்தை தரும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று தனது ஆர்வத்தை ப்ரீத்தி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அதர்வாவுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமான ‘இதயம் முரளி’ வெள்ளிக்கிழமை (ஜூலை 10) உலகளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் பிரான்சில் விறுவிறுப்பாக நடந்ததால், முன்னணி இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘ராக்கா’வில் நடிக்கும் பொன்னான வாய்ப்பை பிரீத்தி தவறவிட நேர்ந்தது.
இதுகுறித்து ஆங்கில ஊடகங்களுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ள இயக்குநர் அட்லி, பிரீத்தி முகுந்தன் அசாத்திய நடிப்பு, நடனத் திறமையைக் கொண்டவர் என்பதால் ‘ராக்கா’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திற்கு அவரைத் தேர்வு செய்ததாகவும், ஆனால் ‘இதயம் முரளி’ படப்பிடிப்பினால் அவரால் தேதிகள் ஒதுக்க முடியாமல் போனதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் ஆங்கில நாளிதழ்களான தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த ஒரு பெரிய வாய்ப்பு நழுவியதால் பிரீத்தியின் வாய்ப்புகள் எவ்விதத்திலும் குறையவில்லை. தமிழில் அடுத்ததாக ‘தாஷமக்கான்’, தெலுங்கில் ‘எமோ எமோ இடி’, மலையாளத்தில் நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ மற்றும் ‘மெய்ன் பியார் கியா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமன்றி, பாலிவுட் முன்னணி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக ‘நாக்ஜில்லா’ திரைப்படத்தின் மூலம் இந்தியிலும் பிரம்மாண்டமாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

