தமிழ்த் திரையுலகம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் நல்ல கதையம்சம் உள்ள படங்களை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் இயக்குநர் பேரரசு.
மக்கள் குறைந்த செலவில் உருவாகும் சிறிய படங்களைப் பார்க்க திரையரங்குக்கு வரத் தயங்குவதாக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“அனுபவம் இல்லாதவர்கள் இணைந்து உருவாக்கும் படங்கள் தரமானதாக இல்லை. சுமாரான கதை, தரமில்லாத நடிப்பு எனப் பல அம்சங்கள் படத்துக்குப் பின்னடைவாக அமைந்துவிடுகின்றன. சின்ன படங்களுக்கு நல்ல கதைதான் அவசியம்.
“பெரிய நடிகர்களோ, பெரிய செலவுகளோ இல்லாத பட்சத்தில், நல்ல கதையை நம்பித்தான் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு, திரையுலகத்துக்கும் நல்லது,” என்றும் பேரரசு வலியுறுத்தி உள்ளார்.

