தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கையில் கிடைத்த பெரிய ஆசீர்வாதம்: மஞ்சு வாரியர்

3 mins read
25092d6d-a817-4e4a-a512-a0f072de8f17
மஞ்சு வாரியர். - படம்: ஊடகம்

‘வேட்டையன்’ படத்தையடுத்து மஞ்சு வாரியர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‘விடுதலை 2’.

யதார்த்தமான நடிப்பால் தென்னிந்திய சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள இவருக்குப் பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தாலும், தனக்குப் பிடித்தமான கதாபாத்திரங்கள், கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

‘விடுதலை 2’ திரைப்படத்தில் வாத்தியார் சேதுபதி மனைவியாக நுணுக்கமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளாராம்.

“திரையுலகுக்கு வருவேன் என்று நான் கனவிலும்கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதற்கான எந்த தொடர்பும் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கிடையாது.

“கல்லூரியில் படிக்கும்போது கேரள அரசு நடத்திய இளையர் விழாவில் கலந்துகொண்டேன். அப்போது என் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. அதைப் பார்த்துவிட்டுத்தான் நடிக்க அழைத்தனர்.

“எதற்கும் முயன்று பார்க்கலாம் என்றுதான் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தேன். அதன் பிறகு நடந்தது எல்லாம் ஆச்சர்யம்தான்,” என்று சொல்லும் மஞ்சு வாரியர், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முடித்துவிட்டார்.

“இது வாழ்க்கையில் எனக்கு அமைந்த மிகப் பெரும் ஆசீர்வாதம்,” என்று தனக்கே உரிய அழகு சிரிப்பை உதிர்த்தபடி பேசும் இவர், ‘விடுதலை 2’ படம் மிக அருமையான படைப்பாக உருவாகியுள்ளது என்கிறார்.

“என் படங்களின் வரிசையைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். அது தானாக நேர்கிறது. ஒருவேளை எனது உள்ளுணர்வின் உந்துதலால் நல்ல கதைகளைத் தேர்வு செய்வதாக நினைக்கிறேன்.

“ஒரு கதை, அதில் எனக்கான கதாபாத்திரம் ஆகியவற்றுடன் என்னைப் பொருத்திக்கொள்ள மொத்த கதையையும் அச்சு வடிவில் கொடுத்துவிட்டால் நல்லது. அது மட்டுமே எனக்குப் போதுமானது.

“இதன் மூலம் ஒரு கதை, கதாபாத்திரத்துடன் நான் கரைந்து போய்விடுகிறேன். ‘அசுரன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை 2’ கதையை என்னிடம் முழுமையாகச் சொல்லி முடிக்கும் முன்பே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

“வெற்றிமாறன் எந்தப் படத்தை எடுத்தாலும், கதையின் தீவிரம் காரணமாக அது முக்கியமான படமாக மாறிவிடுகிறது. அவர் தன் படத்தில் சொல்லவரும் விஷயம், அது சார்ந்த அரசியல் எல்லாமே நமக்கு ஏற்கெனவே தெரிந்தவைதான்.

“மக்களோடு மக்களாக இருந்து உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவனின் கதைதான் ’விடுதலை 2’. இதுபோன்று விளம்பரமின்றி, புகழுக்கு ஆசைப்படாமல் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் பலர் உள்ளனர்.

“நாம் யோசிக்காத பல அம்சங்களை யோசிக்க வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தில் பணியாற்றியதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது,” என்கிறார் மஞ்சு வாரியர்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க மூன்று வாய்ப்புகள் தேடி வந்தனவாம். ஆனால் அவை கைகூடாததால் மிகவும் வருந்தியதாகச் சொல்கிறார் மஞ்சு வாரியர்.

“பல ஆண்டுகளாக அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு விழாவில் அவருடன் கலந்துகொண்டேன். அப்போதும்கூட இருவரும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தோம்.

“அவரை ஏன் சிறந்த நடிகர் எனப் பாராட்டுகிறார்கள் என்பது நேரில் அவர் நடிப்பதைப் பார்க்கும் போதுதான் புரிந்தது. அவரது யதார்த்தமான நடிப்பு மிக அழகானது.

“அதேபோல் வெற்றிமாறன் உருவாக்கும் வாத்தியார் தோற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல. அவற்றில் நடிப்பது சிரமமான காரியம். இவ்வளவு கனமான கதைகளை இயக்கும் அவர், அனைவரிடமும் இயல்பாகப் பழகுவதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவரது படத்தில் இரண்டாவது முறை நடிப்பது என் பாக்கியம்,” என்று நெகிழும் மஞ்சு வாரியர், மலையாளம், தமிழ் என இரு மொழிப் படங்களிலும் நடிக்க விரும்புகிறாராம்.

இவருக்கு இசையிலும் ஆர்வம் உள்ளது. ஓரளவு பாடத் தெரியுமாம். கேரளத் திரைப்படக் கலைஞர்கள் விழா ஒன்றில் பாடிய தமிழ்ப் பாடல் ஒன்றுதான் ஒரு பாடகியாகவும் இவரைப் பிரபலப்படுத்தியது.

“பத்து வயது முதல் நாகர்கோவிலில்தான் நான் வளர்ந்தேன். ஆரம்பக் காலம் முழுவதும் இளையராஜா பாடல்களில்தான் கழிந்தது. அண்மையில் இளையராஜாவை சந்தித்த தருணத்தை வாழ்நாளில் மறக்க இயலாது.

“நான்தான் மஞ்சு என்று அறிமுகப்படுத்திக் கொண்டபோது, ‘உங்களைத் தெரியுமே’ என்று சொல்லி கனிவுடன் புன்னகைத்தார். அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. இளையராஜா பாடல்களை இந்தப் படத்தில் நான் உச்சரிக்கும்படியாக வாய்ப்பு அமைந்தது எனது வாழ்நாள் பேறு,” என்கிறார் மஞ்சு வாரியர்.

குறிப்புச் சொற்கள்