ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘தல’ அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இதில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. டீசர் காட்சிகள் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி 24 மணிநேரத்தில் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இந்நிலையில், திரைப்படம் வெளியாக இன்னும் 1 மாத காலம் மட்டுமே இருப்பதால் இம்மாத இறுதியில் படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து விரைவில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ஃபர்ஸ்ட் சிங்கிள் சூன் மாமே, சுட சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்” என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஈராண்டுகளாக அஜித் நடித்த படம் எதுவும் வெளிவராமல் இருந்தது. அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ வெளியானது.
90களில் வெளியான ‘பிரேக்டவுன்’ ஹாலிவுட் படத்தை மையமாகக் கொண்டு உருவான ‘விடாமுயற்சி’யில் அஜித் ‘சூப்பர்ஸ்டார்’ பாணியில் நடிக்காமல் அடக்கமான தோற்றத்தில் நடித்திருந்தார்.
அவரின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றபோதும் ‘விடாமுயற்சி’ வசூலில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை. இனி ‘குட் பேட் அக்லி’ சேர்த்து வைத்து உற்சாகமளிக்கும் என்பது ‘தல’ ரசிகர்களின் நம்பிக்கை.