அனைத்துலகப் பட விழாவில் கவனம் ஈர்த்த ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’

2 mins read
252ecb9f-4f5d-400a-afc1-1b80c2a13fa6
‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

அண்மையில் நடைபெற்று முடிந்த கோவா அனைத்துலக திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக ‘அமரன்’, ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ ஆகிய இரு திரைப்படங்கள் மட்டுமே பங்கேற்றன.

அவற்றில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தில் அப்புக்குட்டி நாயகனாக நடித்துள்ளார்.

“எப்போதுமே ஒரு நடிகருக்கு, தான் நடிக்கும் படத்திற்கு ஆகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் அளவில்லா மகிழ்ச்சி உண்டாகும். நான் அப்படியான மகிழ்ச்சியில் இருக்கிறேன்,” என்கிறார் அப்புக்குட்டி.

இப்படத்தின் கதையும் இயல்பான காட்சியமைப்பும்தான் அனைத்துலகப் படவிழாவில் திரையிடத் தேர்வு செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், தனது கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக அமைந்தது என்கிறார்.

இப்படத்தில் இரண்டு நாயகிகள். ஐஸ்வர்யா அனில்குமார், ஸ்ரீஜா ஆகிய இருவருமே அற்புதமான நடிப்பை வழங்கியதாகப் பாராட்டுகிறார் நாயகன்.

“படம் பார்த்த அனைவருமே என் நடிப்பைப் பாராட்டுகிறார்கள். இப்படியொரு கதையை உருவாக்கியதால்தான் என்னால் நடிக்க முடிந்தது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது ‘நான் மதுப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்’ என்ற விழிப்புணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படும்.

“இந்தத் தகவலை இயக்குநர் ராஜூ சந்திரா படம் பார்ப்பவர்களுக்கு கச்சிதமாக உணர்த்தியுள்ளார். எனவே, அனைத்துப் பாராட்டுகளும் இயக்குநருக்குத்தான் சொந்தம்.

“எனது அடுத்தகட்ட படங்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. தேசிய அளவிலான விருதுகளும் பாராட்டுகளும் ஒரு கலைஞனாக என்னை நானே புதிப்பித்துக்கொள்ள உதவுகின்றன.

“இதுபோன்ற கதைகளில் அப்புக்குட்டி நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர்கள் யோசிக்கும் அளவுக்கு பெயர் வாங்கியுள்ளேன் என்பது பெரிய மனநிறைவைத் தருகிறது,” என்று சொல்லும் அப்புக்குட்டி, ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ போன்ற படங்களை ரசிகர்கள் நேரடியாக திரையரங்குக்கு வந்து பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

விரைவில் ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியாகிறது. திரையரங்கில் சாதிக்காத இந்தப்படம் ஓடிடியில் நிச்சயம் சாதிக்கும் என்கிறார் அப்புக்குட்டி.

தற்போது ’ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ ஆகிய இரு படங்களிலும் கதாநாயகனாக நடித்து வரும் இவர், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

குறிப்புச் சொற்கள்