மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. அவருடைய 8வது படமான ‘கடைசி உலகப் போர்’ செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஆதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட்’ தயாரித்தது.
இப்படத்தின் இந்திக் குரல் பதிவு (டப்பிங்) அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டிரைலரை நடிகை தமன்னா வெளியிட்டு வாழ்த்தினார்.
“கடைசி உலகப் போர் படத்தின் இந்தி டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. மகாராஜாவில் சிறப்பாக நடித்த நட்டி நடராஜ், இப்படத்தில் போர் குறித்த கருத்தைச் சிறப்பாக கூறியுள்ளார். இந்த உலகத்தில் அமைதியே எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமானது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்,” எனத் தனது ‘எக்ஸ்’ பதிவில் தமன்னா தெரிவித்தார்.
நடிகை தமன்னா தற்போது 2 இந்திப் படங்களிலும் ஒடேலா 2 என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.