தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி: யுகேந்திரன்

2 mins read
55c7cf35-1705-4226-9309-2e1e873932b3
யுகேந்திரன். - படம்: ஊடகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட்டியுள்ளார் யுகேந்திரன்.

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் வாரிசான இவர், ‘கோட்’ படத்தில் நடித்ததன் மூலம் விஜய் ரசிகர்களின் அன்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.

இந்நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் இவர் பாடிய ‘மனசிலாயோ’ பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோட்’ படத்தில் எனது தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். விஜய் படத்துக்காக தோற்றத்தை நான் மாற்றிக்கொள்ளவில்லை. நான் எப்போதுமே இப்படித்தான் இருப்பேன்.

“தலையில் தொப்பி அணிந்து நடிப்பதால் எனக்கு தலைமுடி கொட்டி போய்விட்டதோ என்று நினைக்க வேண்டாம். அதனால்தான் தலைமுடியுடன் இருக்கும் சில காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்,” என்கிறார் யுகேந்திரன்.

‘கோட்’ படத்தில் ஒப்பந்தமானதில் இருந்து இவரது வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கின்றதாம்.

21 ஆண்டுக்கு முன்பு ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்ற பாடலைப் பாடியிருந்தார் மலேசியா வாசுதேவன். அந்தப்பாடல் தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் ‘வேட்டையன்’ படத்தில் ஒலிக்கிறது. இந்தப் பாடலில் இப்போது யுகேந்திரன் குரலும் இணைக்கப்பட்டுள்ளதாம்.

“சூப்பர் ஸ்டார் படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு அமையும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தனது புதுப்படத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒரு பாடல் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று அவரே விரும்பியுள்ளார். இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத் தரப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

“புதிய தொழில்நுட்பத்தில் என்னுடைய குரல் எப்படி இருக்கும் என்று என்னால் முதலில் யூகிக்க முடியவில்லை. ஆனால் எல்லாம் எதிர்பார்த்தபடி இருப்பதாக அனிருத் கூறினார். அதன் பிறகே நிம்மதி அடைந்தேன்.

“மேடை இசை நிகழ்ச்சிகளில் தன் தந்தையைப் போன்று பாடி வருகிறார் யுகேந்திரன். எனவே தந்தையின் குரலில் தாமே பாடலாமே என்று அவரே விரும்பிக் கேட்க அனிருத்தும் சம்மதித்தாராம்.

“இல்லையென்றால் அப்பாவின் குரல் மட்டுமே இடம்பெற்றிருக்கும். நடப்பு இளம் தலைமுறையினரும் அப்பாவின் பாடலைக் கேட்க வேண்டும் என்றிருக்கிறது. அது தற்போது நடந்துள்ளது.

“‘மனசிலாயோ’ பாடலை நியூசிலாந்தில் உள்ள என் வீட்டில் இருந்தபடி பாடி ஒலிப்பதிவு செய்து அனுப்பினேன். என் வீட்டில் சின்ன ஒலிப்பதிவுக் கூடம் உள்ளது. அதில்தான் பாடி பதிவு செய்தேன். அனிருத் மிக நல்ல மனிதர்,” என்கிறார் யுகேந்திரன்.

குறிப்புச் சொற்கள்