தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
“எனது நீண்ட கால நண்பர் கணவராகப் போகிறார்,” என திருமணம் குறித்து முதன்முறையாக அவர் மனம் திறந்துள்ளார்.
தனது வருங்காலக் கணவரான ஆண்டனியுடன், 15 ஆண்டுகளைக் கடந்தும் ஓர் இனம்புரியாத பந்தமும் பாசமும் தொடர்வதாக கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
“15 ஆண்டுக் காதல் இப்போதும் தொடர்கிறது. எப்போதும் தொடரும்,” என இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்று தற்போது இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
திருமணத்திற்கு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மாப்பிள்ளையின் பெயர் ஆண்டனி தட்டில். கேரள மாநிலத்தின் கொச்சியைச் சேர்ந்தவர் . பொறியியல் படித்துவிட்டு கேரளா, சென்னை, துபாயில் தொழில் செய்து கொண்டிருக்கிறார். 34 வயதான ஆண்டனி தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பதின்ம வயதில் சந்தித்த இந்த ஜோடி 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டனி தட்டில் ஒரு தொழில் அதிபர் என்பதை அறிந்ததும் “நீங்களுமா கீர்த்தி சுரேஷ்?” என ரசிகர்கள் கேட்டுள்ளனர். ஏன் நடிகைகள் எல்லாரும் தொழில் அதிபர்களையே திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆண்டனி கொச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளியில் படித்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்பொழுது ஏற்பட்ட காதல், 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை கீர்த்தி சுரேஷின் தந்தை உறுதி செய்திருக்கிறார்.
மேலும், திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருவதையும் உறுதி செய்துள்ளார் கீர்த்தியின் அப்பா சுரேஷ்.
முன்னதாக கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவின. அதைப்பார்த்து வேதனைப்பட்ட சுரேஷ், என் மகளுக்குத் திருமணம் நடக்கும்போது நானே சொல்கிறேன் என்றார். அதன்படி அவரே தன் மகளின் திருமணத்தை உறுதி செய்துள்ளார்.
மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் - நடிகை மேனகாவின் மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான இவர், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக அறிமுகம் கண்டார். ‘பைரவா’, ‘ரஜினி முருகன்’, ‘மகாநதி’, ‘சர்கார்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ‘தெறி’ படத்தின் இந்தி மறுபதிப்பான ‘பேபி ஜான்’ படம் மூலம் பாலிவுட்டிலும் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

