கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்த நடிகர், நடிகை ஆகியோருக்கும் சிறந்த படம், சிறந்த இசை போன்றவற்றிற்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் நவம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
அதில் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வாகியுள்ளார். கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கு எட்டாவது முறையாக வழங்கப்படுகிறது.
‘பிரம்மயுகம்’ படத்திற்காக அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படத்தில், கொடுமண் போற்றி மற்றும் சாத்தன் ஆகிய இரு கதாபாத்திரங்களில் நடித்த அவருக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது அளிக்கப்படுகிறது.
எட்டாவது முறையாகச் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “என்னோடு சேர்ந்து நிறைய இளம் நடிகர்களும் விருதுகளை வென்றிருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நானும் விருது பெற்றிருப்பதில் மகிழ்ச்சியாகவும் இளமையாகவும் உணர்கிறேன். இளம் நடிகர்களோடு சேர்ந்து பயணிக்கிறேன் என்பதே மகிழ்ச்சி,” என அவர் கூறினார்.
மேலும், விருதுகள் என்பது நம் பயணத்தை ஊக்குவிக்கத்தான், போட்டியை ஏற்படுத்த அல்ல என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இம்முறை விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள். விருது கிடைக்காதவர்களுக்கு அடுத்தமுறை கிடைக்கும். திரைப்படங்களில் நடிப்பது விருதை எதிர்பார்த்து அல்ல. அதெல்லாம் அதன் வழியில் நிகழும்,” என்றார் மம்முட்டி.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஷம்லா ஹம்சாவுக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது கொடைக்கானல் குணா குகையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக் குழுவுக்கு மட்டும் மொத்தம் ஒன்பது விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிரம்மயுகம்’ படத்திற்காக மம்முட்டிக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று திரைத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், மம்மூட்டிக்கு தேசிய விருது வழங்கப்படாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கேரள அரசு மம்முட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ விருதை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மம்முட்டிக்குத் தேசிய விருது கொடுக்கத் தேர்வுக் குழுவுக்குத் தகுதியில்லை: பிரகாஷ் ராஜ்
கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நடிகர் பிரகாஷ் ராஜும் இடம்பெற்றிருந்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவின் ஓர் அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சி. மலையாளத் திரைப்படங்களை வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கருத்துகள் கேரள அரசுக்குத் தேவைப்பட்டதால் என்னை அழைத்தனர். ‘நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எந்தத் தலையீடும் இருக்காது, முழு சுதந்திரத்துடன் முடிவுகளையும் உங்கள் கருத்துகளையும் கூறலாம் என அது கூறியது,” என்றார்.
ஆனால், “தேசிய விருதுகளில் அவ்வாறு நடப்பதில்லை. தேசிய விருதுகளில் நிறைய சமரசங்களும் தவறுகளும் இருக்கின்றன என்று சொல்வதில் எனக்குத் துளியும் தயக்கமில்லை. திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் சமரசமின்றி விருதுகள் அறிவிக்கும் தேர்வுக் குழுவும், அரசும் இல்லையென்றால் அவர்கள் அறிவிக்கும் விருதிற்கும் மதிப்பிருக்காது. மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களைப் போன்றவர்களுக்குத் தகுதியில்லை,” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

