தமது திரைப்படங்களின் வெற்றி, தோல்வி குறித்துப் பிரபல இயக்குநர் பி.எஸ்.மித்ரன் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி வரும் அவர், தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘சர்தார் 2’ படத்தை இயக்கி வருகிறார்.
திகிலூட்டும் கதைக்களத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது.
முன்னதாக விஷால் நடிப்பில் 2018ஆம் ஆண்டில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இவர் இயக்கிய ‘ஹீரோ’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
கல்வி மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், தமது படங்களின் வெற்றி தோல்வி குறித்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பி.எஸ்.மித்ரன் விரிவாகப் பேசியுள்ளார்.
‘இரும்புத்திரை’ வெற்றிக்குப் பிறகு ‘ஹீரோ’ தோல்வியடைந்தது தமது கண்களைத் திறந்ததாகக் கூறிய அவர், “கடினமாக உழைத்தால் மட்டும் வெற்றி கிடைக்காது.
“ஒரு படத்தைக் காண வரும் ரசிகர், எந்த மாதிரியான கதையை விரும்புகிறார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படங்களின் வெற்றியை நம்மால் ஒருபோதும் உறுதி செய்ய முடியாது,” என்றும் தமது பேட்டியில் இயக்குநர் மித்ரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, ‘சர்தார் 2’ திரைப்படப் பணிகளை முடித்த பிறகு அடுத்ததாகப் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
அதன்படி தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை வைத்துப் புதிய படம் ஒன்றை மித்ரன் இயக்க உள்ளதாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


