தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
அந்த வகையில் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ என்ற படத்தில் நடிகர் நானியுடன் இவர் நடித்த தெலுங்குப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
இதனால் தனது அடுத்த படத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.
ஒரு வாரத்தில் ஒரு மனிதன் தன் கோபதாபங்களை எல்லாம் மொத்தமாக அடக்கி வைப்பதும் சனிக்கிழமைகளில் மட்டும் அவருக்கு கோபம் வரும் என்பதுதான் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படத்தின் கதைக்களம்.
“நான் இந்தக் கதையை எழுத என் தந்தைதான் காரணம். சனிக்கிழமைதோறும் அவர் உண்ணாவிரதம் இருப்பார். அன்று குறிப்பிட்ட உடைகளைத்தான் அவர் அணிவார். அவரைப் பார்த்துதான் சனிக்கிழமை என்றாலே ஒரு சக்தி கிடைக்கும் என சிறு வயதில் நம்பினேன்.
“ஒரு மனிதனுக்கு பசி போன்று கோபமும் மிகவும் அவசியமானது. ஆனால் எதற்காக, யார் மீது கோபம் காட்டுகிறோம் என்பதும் முக்கியம். இந்தக் கதையை நடிகர் நானியிடம் கூறியபோது மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார்.
“ஒன்றிரண்டு படங்களை மட்டுமே இயக்கியவர்களின் படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார் நானி. அவரைப் பொறுத்தவரை அனுபவம் குறித்து யோசிக்க மாட்டார்.
“மக்களுக்கு நல்ல கதையைக் கொடுத்தால் போதும் என்பதே அவரது விருப்பம். அதனால்தான் அவரது படங்களில் நல்ல அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ் ரசிகர்களுக்கும் அவர் மீதுள்ள நம்பிக்கையால்தான் இந்தப்படம் தமிழகத்திலும் வசூலில் சாதித்துள்ளது,” என்கிறார் விவேக் ஆத்ரேயா.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவரது கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பது நாயகன் நானிக்கு நன்கு தெரியுமாம். இருப்பினும் தயங்காமல் அதற்கு சம்மதித்தாராம்.
“இது போன்ற கதாபாத்திரத்தை எஸ்.ஜே.சூர்யாவால் மட்டுமே ஏற்று நடிக்க முடியும் என உறுதியாக நம்பினேன். கதை எழுதும்போதே அவர்தான் என் நினைவில் வந்தார்.
“அவரது கதாபாத்திரம் எப்போது சிரிக்க வைக்கும், எப்போது பயமுறுத்தும் என்பதைக் கணிக்க முடியாது. மிக சவாலான கதாபாத்திரம் என்றாலும் அருமையாக நடித்தார்.
“காலை 7 மணிக்குத் தொடங்கும் படப்பிடிப்பு, மறுநாள் காலை 6 மணி வரையிலும்கூட தொடர்ந்து நடக்கும். எனினும் அவரிடம் உற்சாகம் குறையாது.
“மிகக் கடுமையாக அவர் உழைப்பதுதான் தற்போதுள்ள உயரத்தை அவர் எட்டிப்பிடிக்க காரணம். நான் அவரது தீவிர ரசிகன்.
விஜய், அஜித் ஆகிய உச்ச நட்சத்திரங்களை இயக்கியவர் என்ற போதிலும் எந்தவிதமான பந்தாவும் பகட்டும் இன்றி எளிமையாகக் காணப்படுகிறார்.
“எஸ்.ஜே.சூர்யாவின் இந்த எளிமைக்கும் நான் ரசிகன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பண்புகளும் தொழில் நுணுக்கங்களும் உள்ளன,” என்கிறார் விவேக் ஆத்ரேயா.


