இடர்கள் புதிதன்று: கார்த்தி

3 mins read
8b28d652-8a2c-4ad3-9c5c-f88fafce2f9c
நடிகர் கார்த்தி. - படம்: ஃபிலிமிபீட்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வா வாத்தியார்’.

‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரித்த அப்படம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும் எனப் படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில், அப்படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 14ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஜனவரி 13ஆம் தேதி சென்னையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, சத்யராஜ், கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “கடந்த ஆண்டே அப்படத்தை வெளியிடப் பெரிதும் முயன்றோம். ஆனால், சில தடைகள் ஏற்பட்டன. எனக்குத் தடைகள் புதிதன்று.

“நான் நடித்த முதல் படமும் சில தடைகளுக்குப் பிறகுதான் வெளியானது. ‘வா வாத்தியார்’ படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா எனக்கு ஆறுதல் கூறினார். என்னைப் பற்றி கவலைப்படாதீர். நீங்கள் நிம்மதியுடன் இருங்கள். அதுதான் முக்கியம்.

“எல்லாப் போராட்டத்திலும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என ஓடிக்கொண்டிருப்பதால் உடல்நலத்தைப் பேண மறந்துவிடுவோம். எனவே, உடல்நலம் முக்கியம் என அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன்,” என்றார்.

மேலும், ஒவ்வோர் அரிசியிலும் அந்த அரிசிக்குரியவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்றும் அதுபோலத் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சிகளிலும் யார் இருக்க வேண்டும் என்பதையும் திரையுலகம் தீர்மானித்திருக்கும் என்றும் தனது தந்தை தன்னிடம் கூறியதாகக் கார்த்தி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி.
‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி. - படம்: ஆனந்த விகடன்

ஒரு நல்ல கதை அதற்குத் தேவையான இயக்குநரையும் தயாரிப்பாளரையும் நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அதுவே தேர்வு செய்துகொள்ளும் என்றார் அவர்.

“எனவே, இவற்றை நம்பினால் திரையுலகில் நிம்மதியாக இருக்கலாம் எனக் கூறிய அவர், அதுபோல தாமதங்கள் வரும்போது பதற்றம் அடையத் தேவையில்லை எனக் கூறினார்.

“‘வா வாத்தியார்’ படம் பெரும் தாமதம், போராட்டத்துக்குப் பிறகு திரைக்கு வருகிறது. நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். குறிப்பாக என் அண்ணா சூர்யாவுக்கு. அவருடைய பெரும் ஆதரவு இந்தப் படத்துக்கு உதவியாக இருந்தது.

“இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பெரும் பயமாக இருந்தது. அதற்குத் தேவையானப் பயிற்சியை மேற்கொண்டேன். எம்ஜிஆர் படங்களைப் பலமுறை பார்த்தேன்.

“உண்மையிலேயே அவர் ஒரு மாபெரும் மனிதர்தான். திரையிலும், திரைக்குப் பின்னாலும் நாயகனாக வாழ்ந்திருக்கிறார். அவருடைய நினைவிடத்துக்குச் சென்றிருந்தோம். அங்கு எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

“அவர் மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்றும் மக்கள் மனத்தில் அவர் அதே ஈர்ப்புடன்தான் இருக்கிறார்,” என எம்ஜிஆரைப் புகழ்ந்து பேசினார் கார்த்தி.

சந்தோஷ் நாராயணனின் இசை அப்படத்தை வேறு ஓர் இடத்துக்குக் கொண்டுச் சென்றிருக்கிறது எனக் கூறிய கார்த்தி, இந்தப் படத்தில் நான் நடிப்பதால் மட்டுமே நடித்ததாகச் சத்யராஜ் கூறியதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்த கேள்விக்கு, “அப்படம் தாமதமாக வந்தாலும் மிகச் சரியான நேரத்தில் வரும் என நம்புகிறேன். காலம் சரியான நேரத்தில் அதைக் கொண்டு வரும். காலம் நிறைய விவகாரங்களை அப்படித்தான் செதுக்கியிருக்கிறது,” எனப் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்