தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது: ‘குட் பேட் அக்லி’ வில்லன்

2 mins read
e59c1bfc-baf4-4f7f-a14a-bffa1b4dbe6c
அஜித் குமாருடன் அர்ஜுன் தாஸ். - அர்ஜுன் தாஸ்/எக்‌ஸ்

அஜித் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ், அஜித்துடன் நடித்திருப்பது குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

“இன்னும் சில மணிநேரம்தான் இருக்கிறது. பதற்றம், உற்சாகம், ஆர்வம் எனப் பல உணர்வுகளுடன் காத்திருக்கிறேன்,” என அவரது பதிவு தொடங்குகிறது.

டி’ஒன் நிறுவனத்தில் அஜித்தின் படங்களுக்கான விளம்பரப் பணிகளை நான் தொடங்கியபோது, அவருடன் நடிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என்றார் அர்ஜுன் தாஸ்.

“ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அது இறுதியாக நடந்திருக்கிறது. டி’ஒன் நிறுவனத்தில் நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலையில் திரையரங்குக்குச் சென்று, பார்வையாளர்களின் வரவேற்பைக் கவனித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

“இன்றும் அதே டி’ஒன் பையனாக அதை மீண்டும் செய்வேன். ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் அஜித் சாருடன் திரையில் தோன்றும்போது உங்களின் நேரடி உணர்வுகளைப் பார்க்க முடியும்,” என்று அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சியுடன் பதிவில் கூறினார்.

“என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அஜித் சார். இது உங்கள் மீதான முழுமையான மரியாதை. உங்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளையும் உங்கள் கருணை, உங்கள் தாராள மனப்பான்மை, உங்களுடனான உரையாடல்கள், நகைச்சுவைகள், உங்களுடனான பயணம், நீங்கள் கொடுத்த ஆலோசனை என எல்லாவற்றையும் கொண்டாட்டத்துடன் மதித்து எப்போதும் போற்றுவேன்,” என்று அர்ஜுன் தாஸ் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

“இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன். இப்போது நான் நடித்திருப்பது உங்களால், உங்களுக்காக. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் நம்புகிறேன்,” என்றார் அவர்.

அஜித் ரசிகர்களையும் மறவாது நினைவுகூர்ந்த அர்ஜுன் தாஸ், “உங்கள் அனைவரின் அன்புக்கும் மரியாதைக்கும் மிக்க நன்றி. நான் உண்மையிலேயே உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ‘குட் பேட் அக்லி’ படத்தைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஒரு முழுமையான கொண்டாட்டத்தைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தன் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொண்ட அர்ஜுன் தாஸ், “உங்கள் வாக்குறுதியை மறந்துவிடாதீர்கள்...” எனக் கூறி பதிவை நிறைவுசெய்தார். ஆனால், அது என்ன வாக்குறுதி என்பதை அவர் விவரிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
அஜித்திரைச்செய்திதிரைப்படம்