தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி முகமூடி அணிந்து வருகிறார்; பழிவாங்குகிறார்: தனுஷ் மீது நயன்தாரா புகார்

3 mins read
5ab46a45-235c-4f71-b551-d4c2a46f46ee
நடிகர் தனுஷ். - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகர் தனுஷ் தம்மை பழிவாங்கத் துடிப்பதாக நடிகை நயன்தாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பின்புலம் ஏதும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் தாம் இன்றைய நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஊடகத்துக்காக நயன்தாராவின் திருமண, தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து ‘நயன்தாரா பியாண்ட் த ஃபெய்ரி டேல்’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகள் சில நொடிகள் இடம்பெற்றுள்ளன என்றும் இதையடுத்து அக்காட்சிகளைப் பயன்படுத்த பத்து கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று தனுஷ் கோரியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபம் அடைந்துள்ள நயன்தாரா, ‘கீழ்த்தரமான இந்தச் செயல், ஒரு மனிதராக தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும் எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்படப் பணிகளில் பங்காற்றிய ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

“காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலைக் கண்டறிந்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

“இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும் பாடல்களையும் புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலன் அளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

“அந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், அதன் வரிகள். அதைக்கூட பயன்படுத்தக்கூடாது என்பது எந்த அளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

“மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல், ஒரு விழுக்காடுகூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும் எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம்வர முடியும்.

“அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளைப் புனைந்து, அதையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதைக் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்று நயன்தாரா தமது அறிக்கையில் காட்டத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையே, தனுஷ் குறித்து தாம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவை விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளார். இந்நிலையில், நயன்தாராவின் அறிக்கை சமூக ஊடகத்தில் வெளியானது.

இதற்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனுஷுடன் இணைந்து நடித்த நாயகிகளும்கூட நயன்தாரா பதிவை ‘லைக்’ செய்து ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா லட்சுமி, ஷ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா ராஜேஷ், நஸ்ரியா, அனிதா, அபிராமி, இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் என நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பட்டியல் மேலும் நீளமாகி வருகிறது.

இதற்கிடையே, தனது படத்துக்கு வைத்திருந்த ‘எல்ஐசி’ என்ற தலைப்பை விக்னேஷ் சிவன் பறிக்க முயற்சி செய்வதாக இயக்குநர் குமரன் சாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்துக்கு ‘எல்ஐசி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தலைப்பை இசை அமைப்பாளரும் இயக்குநருமான குமரன் ஏற்கெனவே தனது படத்துக்குச் சூட்டியிருந்தார்.

“தலைப்பை வழங்க முடியாது என நான் கூறியபிறகும், விக்னேஷ் சிவன் அதை தன் படத்துக்கு சூட்டியதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?” என நயன்தாராவுக்கு குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்