1995 தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது ‘இதயம் முரளி’ திரைப்படம். நடிகர் அதர்வா, கயாது லோகர் இணைந்துள்ள படம் இது.
கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்று கருதிய தயாரிப்பாளர் டான் (Dawn) சினிமாஸ் ஆகாஷ் பாஸ்கரன், அத்தலைப்பின் உரிமையை வைத்துள்ள ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை அணுகியபோது, எந்தவித நிபந்தனையும் இன்றி அனுமதி கிடைத்ததாம்.
நம்மில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் காதலில் விழுந்து, எழுந்துதான் வந்திருப்போம். இதுதான் இயல்பு, இன்றைய இளையர்களின் நடைமுறை. அதனால் நம் எல்லோருக்கும் இந்தக் கதை மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும் என்கிறது படக்குழு.
அதற்காக இது வெறும் காதல் படம் என்று முடிவு செய்துவிட முடியாதாம். காரணம், நட்பைக் கொண்டாடும் படமாகவும் இருக்குமாம்.
“யாராக இருந்தாலும் சொல்லப்படாமலே காதல் பூத்திருந்திருக்கும். அந்தக் காதல், காலங்கள் கடந்தும் ஒருவரது மனதில் பசுமையாக நிலைத்து நிற்கும்.
“கிராமத்தில் தொடங்கி, வெளிநாடு வரை பல இடங்களில் கதை பயணமாகும். அதனால் நல்ல பயணக் கதை என்றும் குறிப்பிடலாம். ஒரு காதல் கதைக்கான நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கும்.
“இயக்குநர் ஜீவாவின் ‘உன்னாலே உன்னாலே’, ‘உள்ளம் கேட்குமே’ படங்கள் போல இதைக் கலகலப்பான படமாக எதிர்பார்க்கலாம்,” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். படத்தின் இயக்குநரும் இவர்தான்.
படத்தின் முக்கியமான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கி உள்ளனர். எனவே இயல்பாகவே செலவு அதிகரித்துவிட்டதாம்.
அதர்வா, தமன், கயாது லோகர், நட்டி நட்ராஜ், பிரக்யா, பிரீத்தி முகுந்தன், நிகாரிகா என நிறைய பேர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
“காலஞ்சென்ற நடிகர் முரளி நடித்த ‘இதயம்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இன்று அவரது மகன் அதர்வாவே இப்படத்தின் கதாநாயகனாக அமைந்தது எங்களுக்கே ஆச்சரியமான ஒன்றுதான்.
“அவரிடம் கதையைச் சொன்னதும் மிகவும் உற்சாகமாகிவிட்டார். அவருடைய தாயாரும் கதையைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டதாகத் தெரிவித்தார்.
“படத்தில் அதர்வா, நட்டி நட்ராஜ் ஆகிய இருவருக்குமான பிணைப்பை மிக இயல்பாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தி உள்ளோம். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். அதிலும் அவரது பங்களிப்பு நிச்சயம் பேசப்படும்.
``தமன் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். அவரை மறுபடியும் நடிப்புப் பக்கம் அழைத்து வந்திருக்கிறோம்.
‘‘இந்தக் கதையை யோசிக்கும்போதே அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு தமன்தான் மனதில் வந்தார். அவரை நடிக்கக் கேட்கத்தான் போனேன். ஆனால் அவருக்குக் கதை பிடித்துவிட, அவரே இசையமைக்கவும் தாமாக முன்வந்தார். நான்கு அருமையான பாடல்களைத் தந்துள்ளார்.
“படத்தின் தலைப்பு, அறிமுக காணொளிக்கு கிடைத்த வரவேற்பு மற்ற அனைவரையும்விட தமனை அதிக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் நடித்த முதல் காட்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் படமாக்கியபோது நெகிழ்ந்தார். சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கான கடைசி நாள் படப்பிடிப்பு அங்குதான் நடந்ததாம்.
“நான் அறிமுகப்படுத்திய கயாது, பிரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் எனப் பலரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஆனால் நான்கு பேருமே இந்தப் படத்துக்கு ஒப்பந்தமானபோது புதுமுகங்கள்தான்.
“கயாது தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். நிகாரிகா இன்ஸ்டகிராமில் வெற்றிகரமாக வலம் வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறார்,” என்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்.