புதியவர்களையும் வளரும் நட்சத்திரங்களையும் ஊக்குவிப்பதில் விஜயகாந்த் பெருந்தன்மையானவர்.
விஜய் பல படங்களில் நடித்தபோதும் கிராமப்புறங்களை அவரால் சென்றடைய முடியவில்லை.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கடும் முயற்சி எடுத்தும் பலன் கிடைக்கவில்லை.
விஜயகாந்தின் திரையுலகச் சந்தை மதிப்பை ‘சட்டம் ஒரு இருட்டறை‘ மூலம் தூக்கி நிறுத்தியவர் எஸ்.ஏ.சி.
மீண்டும் விஜகாந்துக்கு பட வாய்ப்புகள் குறைந்தபோதும் ‘சாட்சி` படம் மூலம் மீண்டும் கைகொடுத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அந்த நன்றிக்கடனுக்காக எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தான் நடித்த ‘செந்தூரபாண்டி` படத்தில் கிட்டத்தட்ட நாயகனுக்குச் சமமான கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார் விஜயகாந்த்.
‘பெரியண்ணா` படத்தில் முக்கியத்துவம் உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கவும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார் விஜயகாந்த். இதுவும் எஸ்.ஏ.சி. இயக்கிய படம்தான்.
‘தினகரன்` பத்திரிகையில் விநியோக மேலாளராகவும் செய்தியாளராகவும் இருந்த சரத்குமார், ‘கண்சிமிட்டும் நேரம்’ என்கிற படத்தை தயாரித்துத், இன்ஸ்பெக்டராக ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அதன் பின் சிறு பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன.
ஆனால், 1989ல் விஜயகாந்த் தயாரித்து நடித்த `புலன் விசாரணை` படத்தில் வில்லனாக சரத்தை அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பும் தந்தார். விஜயகாந்த நடித்த நூறாவது படமாக உருவானது ‘கேப்டன் பிரபாகன்’. இதில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்தார் சரத்.
அதன்பிறகே அவர் தனி நாயகனாக நடித்து வெற்றிபெற்றார்.
விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன் இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டுமே அவருக்குக் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியின் கதாநாயகனாக நடிக்க, கதையின் நாயகனாக சரத்குமார் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு `கொம்புசீவி` எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தன்னைச் சினிமாவில் வெற்றிபெற வைத்த விஜயகாந்துக்கு நன்றிக்கடனைச் செலுத்தியிருக்கிறார் சரத்.
இப்படி எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜயகாந்த் செலுத்திய நன்றிக்கடனும், விஜய், சூர்யாவை தன் படத்தில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு செய்த உதவியும், சரத்குமாரை மிக முக்கியத்துவத்துடன் தன் படத்தில் அறிமுகம் செய்த விஜயகாந்த் தற்போது காலமாகிவிட்டாலும் அவர் செய்த உதவிகளுக்குப் பலன் கிடைத்திருக்கிறது.
பெற்றவர்கள் பட்ட கடன் மட்டுமல்ல, அவர்கள் செய்த புண்ணியமும் பிள்ளைகளைச் சேரும்.