தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகைகளின் நல்ல மனசு

3 mins read
1f06b022-ceaa-4d31-badd-9bd926dc4399
அமலா பால். - படம்: ஊடகம்
multi-img1 of 10

நடிகர்கள்தான் ஏழைகளுக்கு உதவி செய்வார்கள், நடிகைகள் செய்ய மாட்டார்கள் எனும் மாயத்தோற்றம் திரையுலகிலும் வெளியுலகிலும் நிலவி வந்தது.

ஆனால், அந்தக் காலத்திலிருந்தே நடிகைகள் கருணையோடு பல உதவிகளைச் செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட விச்சு, சிறுவனாக இருக்கும்போதே கோவை ஸ்டுடியோ ஒன்றில் இசைக் கருவிகளை எடுத்து வைக்கும் வேலையைச் செய்து வந்தார்.

இசையமைப்பாளருக்குத் தெரியாமல் அவ்வப்போது ஆர்மோனியத்தை எடுத்து வாசித்துப் பார்ப்பார் விச்சு. ஒருநாள் இது பிரச்சினையானது.

இதைக் கவனித்த அன்றைய கனவு நாயகி டி.ஆர்.ராஜகுமாரி, ஒரு புத்தம் புதிய ஆர்மோனியப் பெட்டியை விச்சுவுக்கு வாங்கிக்கொடுத்தார்.

அந்த விச்சுதான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இதுபோல் பல நடிகைகள் செய்த உதவிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்றைய கதாநாயகிகள் நேரடியாகவும் தங்களது ட்ரஸ்ட் மூலமாகவும் ஏழை மக்களுக்கு மருத்துவ, கல்வி உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

அவர்களைப் பற்றி இந்தச் செய்தித் தொகுப்பில் பார்ப்போம்...

சமந்தா

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா, திருமண நிகழ்ச்சிகளில் சென்ட் தெளிக்கும் வரவேற்புப் பெண்ணாக வேலை செய்தவர். அடித்தட்டு மக்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்தவர்.

மாடலிங்கில் நுழைந்து, நடிகையாக புகழ் பெற்றதும் ‘பிரத்யுஷா சப்போர்ட்’ எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறார்.

இதுவரை சுமார் நூறு ஏழைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்துள்ளார்.

நடிகை தேஜஸ்வி மாதிவாடா காசநோயால் பாதிக்கப்பட்டபோது அறுவை சிகிச்சை செய்ய தேவையான பணத்தை சமந்தா வழங்கினார்.

முதியோர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய நிதியுதவி செய்தார். மருத்துவ முகாம், ரத்ததான் முகாம் நடத்தினார். ஏழை குழந்தைகளுக்கு கல்வியில் உதவி செய்தார்.

தான் வசிக்கும் பகுதியான பல்லாவரத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 லட்சம், கைத்தறி தொழிலைக் காக்க, கைத்தறி ஆடை அணிந்து பிரச்சாரம் செய்தார்.

இப்படி எண்ணற்ற உதவிகளைச் செய்து வரும் சமந்தா, திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் கதாநாயகியாக உயர்ந்து நிற்கிறார்.

திரிஷா

திரிஷாவின் கரங்களும் உதவிக்கரங்கள்தான்.

இவர் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்கிறார். தன் ரசிகர்களையும் சேவை செய்ய ஊக்குவிக்கிறார்.

‘பீட்டா’ அமைப்புடன் இணைந்து தெருநாய்களின் நலனுக்காக உழைக்கிறார்.

தெருநாய்களைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என பிரசாரம் செய்கிறார்.

‘யுனிசெஃப்’ நிறுவனத்தின் வழக்கறிஞர் அந்தஸ்தை தன் சமூக சேவைகளுக்காகப் பெற்றுள்ளார்.

சனம் ஷெட்டி

‘அம்புலி’ பட நாயகி சனம் ஷெட்டி, தன் நண்பர்களுடன் இணைந்து, ‘நம் மக்களின் குரல்’ என்ற சமூக நல அமைப்பை நடத்தி வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் எளிய மக்களான நரிக்குறவர்களுக்கு இந்த அமைப்பின் மூலம் உதவிகளைச் செய்தார்.

இப்படியான பல உதவிகளை தன்னால் இயன்ற அளவு செய்து வருகிறார்.

நயன்தாரா

நயன்தாரா சத்தமில்லாமல் பல உதவிகளைச் செய்து வருகிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பெண்களுக்கு சுகாதார பொருள்கள் உட்பட பல்வேறு அத்தியாவசியங்களை வழங்கினார்.

‘சகோதரிக்கு சாஸ்நேயம்’ என்ற அமைப்புடன் இணைந்து உதவிகளைச் செய்து வருகிறார்.

அமலாபால்

கண்தான விழிப்புணர்வுக்காக ‘ஹோம்’ என்ற சமூகச்சேவை அமைப்பை நடத்தி சேவை செய்கிறார் அமலாபால்.

வரலட்சுமி சரத்

‘சேக் சக்தி’ என்கிற அமைப்பை ஏற்படுத்தி, பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் களைய பாடுபடுகிறார் வரலட்சுமி.

ஸ்‌ரேயா சரண்

பார்வையற்றவர்களுக்கான ‘ஸ்பா’ ஒன்றை நடத்தி வருகிறார் ஸ்‌ரேயா.

ரேவதி

பேனியன், எமிலிட்டி ஃபவுண்டேஷன், டங்கர் ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளுடன் இணைந்து சமூகப் பணிகளில் முன்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ரேவதி.

கௌதமி

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கௌதமி, ‘மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி’ நிகழ்ச்சிகளில் தீவிரமாகச் செயல்படுகிறார்.

தீபிகா படுகோன்

‘லிவ் லவ் லாஃப்’ எனும் அறக்கட்டளையை நிறுவி, மனநலம் பாதிக்கப்பட்ட கிராமப்புறப் பெண்களுக்கு மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறார் தீபிகா.

அத்துடன், அந்தப் பெண்கள் நலம் பெற்றதும் சுயமாக உழைக்க வழிவகைகளையும் அமைத்துக் கொடுக்கிறார்.

இதுவரை 2,000 பெண்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம் உதவியிருக்கிறார் தீபிகா.

இப்படி பல்வேறு உதவிகளை நேரடியாக மக்களுக்கும் சமூகத்திற்கும் செய்து வருகிறார்கள் நடிகைகள்.

நடிகைகளின் நல்ல மனசையும் நாம் வாழ்த்துவோம்.

குறிப்புச் சொற்கள்