திரையுலகம் வேகமாகச் சூழலும் உலகம். அங்குள்ள கலைஞர்களும் பம்பரம்போல் சூழன்றபடி பணியாற்றுவார்கள். இதில் கதாநாயகர்களும் விதிவிலக்கல்ல.
இவர்களின் நடிப்பில் உருவாகும் முக்கியமான சில படங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
இறுதிக்கட்டத்தை நெருங்கிய “ஜன நாயகன்” படப்பிடிப்பு:
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசிப் படம் எனக் கூறப்படுகிறது.
கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026ல் வெளியிட உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.
படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பே பட வேலைகளை முழுமையாக முடித்து வெளியீட்டிற்குத் தயாராகிவிட வேண்டும் எனக் கூறியுள்ளாராம் விஜய். அதனால் மொத்த படக்குழுவினரும் காலில் இறக்கை கட்டிக்கொண்டு பறக்காத குறைதான். படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90% நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது சென்னையில் வெயில் வாட்டியெடுப்பதால் அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதம் 2ஆம் தேதி முதல் கொடைக்கானலில் நடத்த உள்ளனராம்.
பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று என வடஇந்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சூர்யாவின் ‘வாடிவாசல்’:
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘வாடிவாசல்’.
யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை. இந்தப் படத்தைத் தொடங்கியது முதல், ஏதாவது ஒரு காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவும்கூட தகவல் வெளியானது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு போட்டி, மாடுபிடி வீரர்களின் வீரம் ஆகியவற்றை விவரிக்கும் கதைக்களத்துடன் உருவாகிறது என்கிறார்கள்.
இந்தப் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் காணொளி கடந்த ஆண்டு வெளியானது.
அதன் பின்னர் பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டன. ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்புப் பணி விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
இந்நிலையில், ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.
தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணி:
‘கேஜிஎஃப்’ முதல், இரண்டாவது ‘சாப்டர்’ படங்களின் மூலம் உலகளவில் பேசப்பட்ட இயக்குநர் பிரசாந்த் நீல், அடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படம், வசூல் ரீதியில் ஓரளவு சாதித்தாலும், எதிர்பார்த்தபடி பெரும் வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், பிரசாந்த் நீல் உடனான கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து பெரும் சாதனை படைக்கும் என ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இப்போதே சமூக ஊடகங்களில் ஆர்ப்பரிக்கின்றனர்.
இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘வார்-2’ படம், எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘கூலி’ படத்துக்குப் போட்டியாக வெளியாகிறது.
விரைவில் பாலிவுட்டில் அவர் அறிமுகமாக உள்ள நிலையில், ரசிகர்கள் அவரது அடுத்தடுத்த படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் ஜூன் 25ஆம் தேதி 2026ஆம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ‘கேஜிஎஃப்’ 3ஆம் பாகத்தில் அஜித் நடிக்கப் போவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

