‘கும்கி-2’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார் ஸ்ரீதா ராவ்.
மற்ற நாயகிகளைப் போல் என் குடும்பத்துக்கும் சினிமா உலகுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சொல்ல இயலாது என்றும் தனது தாத்தா திரையுலகில் பணியாற்றியவர் என்றும் கூறுகிறார்.
இவரது பாட்டனார் தேவேந்திரா சில இந்திப் படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றியதுடன், சில படங்களை இயக்கியும் உள்ளார்.
“ஆனால், அவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. அவரது தோல்வியால் குடும்பத்தில் இருந்த அனைவருக்குமே சினிமா மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
“தயாரிப்பாளர் மதியழகன் எனக்குத் தாய் மாமன். இப்படி ஓரளவு சினிமா பின்புலமும் அறிவும் இருந்தாலும்கூட, சொந்த முயற்சியால்தான் கதாநாயகியாகி உள்ளேன் என்று சொல்லலாம்.
“உண்மையைச் சொன்னால், நடிகை ஆக வேண்டும் என்று நான் எப்போதுமே ஆசைப்பட்டதில்லை. இயல்பாகவே சற்று பருமனாக இருப்பேன். உடல், மனநலன்களைப் பேண வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தில் நாடகப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.
“எனக்கு நாடகம் குறித்தெல்லாம் ஏதும் தெரியாது. எனினும், ஏதோ ஓர் ஆர்வத்தில் பயிற்சியில் சேர்ந்துவிட்டேன்.
“என் வீட்டில் உடல் பருமனைச் சுட்டி ஏதாவது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். பயிற்சி வகுப்பில் சேர்ந்தாலும்கூட என் பங்களிப்பு மேடைக்குப் பின்னால்தான் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“ஒருமுறை குறிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியவர் வரவில்லை. இரண்டு நிமிடங்கள் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் காட்சியுடன் கூடிய காணொளி ஒன்று, யார் மூலமாகவோ இயக்குநர் பிரபு சாலமனைச் சென்றடைந்திருக்கிறது.
“அந்த சமயத்தில் ‘கும்கி-2’ படத்தின் கதைக்கேற்ப பெரிய கண்களை உடைய நாயகியை அவர் தேடிக் கொண்டிருந்தார். வழக்கமாக அவரது கதாநாயகிகள் அமலா பால், பார்வதி மேனன் ஆகியோர்தான் அப்படிப்பட்ட நாயகியாக நடிப்பார்கள். எனது அதிர்ஷ்டம் பெரிய கண்களும் என் நடிப்பும் இயக்குநருக்குப் பிடித்ததால் முதல் படத்திலேயே நாயகியாகிவிட்டேன்.
“பிரபு சாலமன் மிகுந்த பொறுமைசாலி. தனக்கு வேண்டிய நடிப்பை பலமுறை விளக்கமாக எடுத்துக்கூறி காட்சிகளில் நடிக்க வைப்பார். அவருடன் பணியாற்றிய இந்த ஒரே படத்தின் மூலம் அனைத்து சினிமா நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதாகத் தோன்றுகிறது,” என்கிறார் ஸ்ரீதா ராவ்.
பிரபு சாலமன் மீது இவருக்கு ஒரு சிறு வருத்தமும் உள்ளதாம். ஸ்ரீதா ராவ் நடித்த காட்சிகளை ஏறக்குறைய 60 நாள்களுக்குப் படமாக்கினராம். இதனால் படம் முழுவதும் தான் நடித்த காட்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் ஸ்ரீதா இருக்க, வெறும் இருபது நிமிடங்களுக்கான காட்சிகளை மட்டுமே திரையில் காண முடிந்ததாம். தனது காட்சிகள் நீக்கப்பட்டாலும் இறுதியில் விமர்சகர்களின் பாராட்டுகளால் அனைத்து மனக்குறைகளும் மறைந்து போய்விட்டதாகச் சொல்கிறார்.
இந்தப் படத்தில் யானையுடன் நடித்துள்ளார் ஸ்ரீதா. இவரின் துணிச்சலை எல்லாரும் பாராட்டுகிறார்களாம்.
“தொடக்கத்தில் எனக்கும் மனத்தில் அச்சம் இருந்தது. யானையைக் கட்டி அணைக்க வேண்டும் எனக் கூறியதும் தயங்கினேன். ஆனால், பயிற்சி கொடுத்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் பேசிப் பழகத் தொடங்கியதும் பயம் போய்விட்டது.
“நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் எவ்வாறு நெருங்கிப் பழகுவோமோ அப்படித்தான் யானையிடமும் பழகினேன். என்னால்தான் யானைக்கு பிரச்சினை ஏற்பட்டதே தவிர யானையால் எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை,” என்கிறார் ஸ்ரீதா ராவ்.

