தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதாநாயகிகளின் செல்லங்கள்

4 mins read
c7ede36e-8b74-48cc-ad64-8d73730b085f
ஐஸ்வர்யா மேனன். - படம்: ஊடகம்
multi-img1 of 12

திரிஷா வளர்த்த நாய்:

பிராணிகள் மீது, குறிப்பாக நாய்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் திரிஷா. அவர் தன் உதவியாளர்களை அனுப்பி, தெரு நாய்களுக்கு உணவு வழங்கச் செய்வார்.

‘கைவிடப்பட்ட நாய்களைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும்’ எனப் பொது கோரிக்கை ஒன்றையும் முன்பு தெரிவித்திருந்தார்.

‘ஸோரோ’ என்ற நாயை, 2012ஆம் ஆண்டு முதல், தன் செல்லப்பிள்ளையாக வளர்த்து வந்தார் திரிஷா. கடந்த மாதம் உடல்நலம் குன்றிய ஸோரோ, கிறிஸ்துமஸ் நாளன்று உயிரிழந்துவிட்டது.

ஸோரோவை யாராவது ‘நாய்’ என்று சொல்லிவிட்டால், திரிஷாவுக்கு கடும் கோபம் வந்துவிடுமாம். ஏனென்றால் ‘என் மகன் ஸோரோ’ என்றுதான் குறிப்பிடுவார் திரிஷா.

“என் மகன் ‘ஸோரோ’ உயிரிழந்துவிட்டான். என் வாழ்க்கையில் ஒரு பகுதி இனி வெறுமையாகவே இருக்கும். என் மகன் மீது நான் கொண்டிருந்த பாசம் குறித்து என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்.

“எங்கள் வீடே சோகமாக இருக்கிறது. இந்த இழப்பிலிருந்து என்னால் மீள முடியாது. ஆனாலும் சில நாள்களுக்கு படப்பிடிப்பிற்குச் செல்லாமல் என் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும்,” என தனது துக்கத்தைப் பகிர்ந்துள்ளார் திரிஷா.

அவர் அருகிலிருந்து அவரது தாய் உமா தேற்றிக்கொண்டிருக்கிறார்.

சிவராஜ் குமார் வளர்த்த நாய்:

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஹீரோவும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் குடும்பத்தினரைக் காப்பாற்றுபவராகவும் நடித்த சிவராஜ் குமார், குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவர் வலியில் துடித்தபோது அவரின் வளர்ப்பு நாய் நீமோ கண் கசியும்.

சிகிச்சைக்காக சிவராஜ் குமார் அமெரிக்கா சென்றார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, தற்போது சிவராஜ்குமார் மிகுந்த நலத்துடன் இருக்கிறார்.

ஆனால், தன் எஜமானரின் வலியை எண்ணி எண்ணி, உடல்நலிவுற்றது நீமோ. சில நாள்களுக்கு முன் நீமோ இறந்துவிட்டது.

இந்த துக்கம் தாங்காத சிவராஜ் குமாரின் மனைவி கீதா, “எங்கள் வீட்டில் நீமோவையும் சேர்த்து நாங்கள் ஆறு பேர்,” என நெகிழ்ந்திருக்கிறார்.

“நான் அமெரிக்கா வந்த பிறகுதான் என் குழந்தை (நீமோ) என்னை விட்டுச்சென்றது. அவனது அன்பை யாராலும் நிரப்ப முடியாது,” எனக் கண்கசியச் சொல்லியிருக்கிறார் சிவராஜ் குமார்.

எம்ஜிஆர் வளர்த்த சிங்கம்:

‘அடிமைப் பெண்’ படத்தின் இறுதிக்காட்சியில், பாதாளக் கூண்டுக்குள் எம்ஜிஆர் சிங்கத்துடன் மோதும் சண்டைக்காட்சி பிரமிப்பாக இருக்கும். இதற்காக எம்ஜிஆர் ஒரு பெண் சிங்கத்தை வாங்கி பயிற்சி கொடுத்தார்.

படப்பிடிப்பு முடிந்ததும் அதே பெண் சிங்கத்தை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அளித்துவிட்டார்.

இதேபோல் அன்றைய தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் எம்எல்ஏ விநாயகம், ஒரு ஆண் சிங்கத்தை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்குப் பரிசளித்தார்.

யாஷிகா ஆனந்த்:

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நாயகி யாஷிகா ஆனந்த் ஓராண்டுக்கு முன் கார் விபத்து ஒன்றில் சிக்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தன் தோழியையும் பறிகொடுத்தார். யாஷிகாவின் துக்கத்துக்கு, ‘தெக்விலா’ எனப் பெயர் கொண்ட வளர்ப்பு நாய்தான் ஆறுதல்.

ஐஸ்வர்யா மேனன்:

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ நாயகி ஐஸ்வர்யா மேனன், ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாயை வளர்த்து வருகிறார். பார்க்கவே பிரம்மாண்டமாக கன்றுக்குட்டி போல் இருக்கும் இவ்வகை நாய்கள் சாதுவாக பழகக்கூடியவையாம்.

‘பாகுபலி’ அனுஷ்கா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பெரும்பாலான நடிகைகள், ‘நாய்’ பிரியைகளாகவே இருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், ‘நைக்’ எனும் பெயர் கொண்ட நாயை வளர்க்கிறார். பார்க்க பூனைபோல் மிகக் குட்டியாக இருக்கிறது.

அண்மையில் திருமணமான கீர்த்தி, ‘நாய் வளர்க்க அனுமதிக்க வேண்டும்’ என புகுந்தவீட்டில் நிபந்தனை போட்டு சம்மதம் வாங்கினாராம்.

அமலா பால்

அமலா பாலின் இரண்டு மண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்தது. இதனால் மிகுந்த மன வேதனைப்பட்ட அமலாபால் ஆன்மீக உலகிலும் செல்லப் பிராணிகள் வளர்ப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா

‘புஷ்பா’ புகழ் ராஷ்மிகா மந்தனா தன் வளர்ப்பு நாயைக் குழந்தையைக் கொஞ்சுவதுபோல் கொஞ்சுகிறார். படப்பிடிப்பிற்குப் போனாலும் கைப்பேசி மூலம் தன் செல்லத்துடன் சிணுங்குகிறார் ராஷ்மிகா.

ஜான்வி கபூர்

‘மயிலு’ ஸ்ரீதேவியான தன் அம்மாவின் மறைவிற்குப் பின் ஜான்விக்கு உற்ற தோழமையாக இருப்பது வளர்ப்பு செல்ல நாய்தான்.

ஆண்ட்ரியா

‘புதுப்பேட்டை’ ஆண்ட்ரியா தனது செல்லப்பிராணி மீது மிகுந்த பிரியம் கொண்டவர். படப்பிடிப்பிற்கு கிளம்பினால் பிரியத்தைச் சிறப்பாக கவனித்துக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டும் போவாராம். ஆண்ட்ரியாவின் வளர்ப்பு நாயின் பெயர், ‘ஸ்நோ’.

சமந்தா

‘விண்ணைத்தாண்டி’, ‘மெர்ஸல்’ நாயகி சமந்தா, வரஷ் மற்றும் சாஷா ஆகிய இரண்டு புல்டாக் இன நாய்களை வளர்க்கிறார். தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தன் வளர்ப்பு நாய்களுக்காகவும் தெரு நாய்கள் நலத்திற்காகவும் செலவிடுகிறார். பூனை ஒன்றையும் வளர்க்கிறாராம்.

இறுதியாக ஒரு ‘லொள்’:

ஏற்கெனவே வளர்ப்புப் பிராணிகள் மீது பிரியமுள்ள சமந்தாவுக்கு இப்போது கணவரைப் பிரிந்திருக்கும் நிலையில், சினிமா உலகமும் பிராணிகள் உலகமும்தான் உலகமாக இருக்கிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

குறிப்புச் சொற்கள்