தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒற்றைப் பாடலுக்கு நடனமாடிய நாயகிகள்

4 mins read
e962cc88-cd01-474d-b492-d5ba3c0e031e
நடிகை சமந்தா. - படம்: ஊடகம்
multi-img1 of 7

ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் பிரபல நாயகியை நடனமாட வைக்கும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவிட்டது.

ஆனால், இந்த நடைமுறை கோடம்பாக்கத்தில் எம்ஜிஆர், சிவாஜி காலம்தொட்டே இருந்து வருகிறது.

முன்பெல்லாம் கதாநாயகி என்று இல்லாமல், ஒன்று அல்லது இரண்டு பாடல்களுக்கு கவர்ச்சி நடிகையை நடனமாட வைக்கும் போக்கு காணப்பட்டது.

பின்னர் யாரேனும் ஒரு நாயகியை குத்தாட்டம் போட அழைத்தனர். இதற்காக கணிசமான சம்பளம் அளிக்கப்பட்டது.

நாளடைவில், ஒரே பாடல் - சில லட்சம் சம்பளம் என்றதும் முன்னணி நாயகிகளும் இந்த ஒற்றைப் பாடல் நடனத்துக்கு கால்ஷீட் ஒதுக்க ஆர்வம் காட்டினர்.

தற்போது ஸ்ரீலீலா, சமந்தா, ஷ்ரேயா, பூஜா ஹெக்டே என திரையுலகின் முன்னணி கதாநாயகிகளை ஒரு பாடலில் மட்டும் பார்ப்பது சகஜமாகிவிட்டது.

“அந்நாள்களில் ரசிகர்களின் மனம்கவர்ந்த நாயகிகளாக விளங்கிய பலர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளனர்.

“நடிகை பத்மினி பிரபலமாவதற்கு முன்பு, ‘தர்ம தேவதா’ என்ற படத்தில் ஐந்து பாடல்களில் நடனமாடினார். அவரது சகோதரிகளான லலிதா, ராகினியும் அவருடன் இணைந்து பல பாடல்களுக்கு நடனமாடினர்.

“ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா போன்ற கவர்ச்சி நடிகைகளின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே திரையரங்குக்கு திரண்டுவந்த ரசிகர் கூட்டம் இருந்தது. தற்போது அவர்களின் வாரிசுகள் ஓரளவு வாய்ப்புகளைப் பெற்று திரையுலகில் நீடித்து வருகின்றனர்.

“ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதா இல்லாத படம் இல்லை என்று கூறும் அளவு கவர்ச்சி நடிகையாக வலம்வந்தார். அவரது வாழ்க்கை சோக முடிவைச் சந்தித்திருக்காவிட்டால், பெரிய கதாநாயகியாக உருவெடுத்திருக்கக்கூடும். பின்னாள்களில் கவர்ச்சியாட்டத்துக்கு என வடமாநிலங்களில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்ததால் சில்க், அனுராதா போன்றவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன.

“ஆனால், மொத்த இந்தியாவுக்குமான ‘பான் (PAN) இந்தியா’ படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்தப் படத்திலும் நடனமாடலாம், கவர்ச்சியும் பணமும்தான் முக்கியம் என்றாகிவிட்டது.

“எனவே, சமந்தா முதல் ஸ்ரீலீலா வரை வரிந்துகட்டிக் கொண்டு ஒரு பாடல் வாய்ப்புகளை ஏற்கின்றனர். ஆனால், சில்க் போன்றோர்கள் இந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை,” என்கிறார் கோடம்பாக்கத்து மூத்த செய்தியாளரான சக்திவேல்.

தற்போது இளையர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது ‘கூலி’ படத்தில் இடம்பெறும் ‘மோனிகா’ பாடல்தான். இதில் நடனமாட பூஜா ஹெக்டேக்கு பெருந்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். இன்றைய தேதியில், இணையத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் பாடல் இதுதான்.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கோட்’ படத்தில் திரிஷா ‘மட்ட’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.

திரிஷா, விஜய் இணைந்து ‘அப்படிப் போடு’ என்ற ‘கில்லி’ படப்பாடலின் நடன அசைவுகளைக் கொண்டு ஆடியது ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்பட்டது.

ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் நயன்தாரா ‘பல்லேலக்கா’ என்ற பாடலுக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

நடிகை ஷ்ரேயா நடித்த படங்களுக்கு மற்ற நாயகிகள் நடனமாடிய நிலை மாறி, அவர் தற்போது சூர்யாவின் புதுப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பிடித்த ‘ஊ சொல்றியா’ பாடல் பெரும் வெற்றியைப் பெற்றது. சமந்தாவின் கவர்ச்சியாட்டம், இசை என எல்லாம் சேர்ந்து பட்டிதொட்டியெங்கும் இப்பாடலை ஒலிக்க வைத்தது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னாவின் ஆட்டத்துடன் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. 2023ஆம் ஆண்டு, ரசிகர்களைக் கவர்ந்த முதல் 10 பாடல்களில் ‘காவாலா’வும் இடம்பிடித்தது.

‘புஷ்பா-2’ படத்தில் ஸ்ரீலீலாவின் நடனத்துடன் இடம்பெற்ற பாடலுக்கு தெலுங்கு ரசிகர்கள் இப்போதும்கூட திரையரங்குகளில் விசிலடித்து ஆட்டம் போடுகிறார்கள்.

சிம்ரன், மீனா, ரம்பா, கவுதமி, குஷ்பு போன்றோர் முன்னணி நாயகிகளாக இருந்தபோது, அல்லது வாய்ப்புகள் கிடைக்காத போது ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி திரையுலகில் தங்கள் இருப்பைத் தக்கவைக்க முயன்றனர்.

எனினும், சிம்ரன், விஜய் நடித்த ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. நடிகர் விஜய்யும்கூட இன்றளவும் தனக்குப் பிடித்தமான நடிகை சிம்ரன் என்றும் அவரது நடன அசைவுகள் அருமையாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்.

இன்றைய தேதியில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட தென்னிந்திய நடிகைகளில் சமந்தா ரூ.5 கோடியும் தமன்னா ரூ.3 கோடியும் பெறுவதாகத் தகவல்.

இந்தி நாயகிகள் தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப் ஆகியோர் அதிகபட்சமாக ரூ.3 கோடி பெறுகின்றனர்.

ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் நடிகைகளின் சம்பளம், அந்த நடிகைக்குக் கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பு, அந்தப் பாடலின் முக்கியத்துவம், படத்தின் பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.

“கவர்ச்சியாட்டம் போடுவதால் மட்டும் வாய்ப்பு கிடைத்துவிடாது. இது சம்பந்தப்பட்ட நாயகிகளுக்கும் தெரியும். எனினும், ஒரு படத்தில் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை ஒரேயோர் பாடலின் மூலம் பெற முடியும் என்பதால் பல நாயகிகள் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட முன்வருகின்றனர்,” என்கிறார்கள் கோடம்பாக்கப் புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்