அண்மைக் காலமாக தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது.
அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம், கமல் எனப் பலரது அடுத்த படங்களின் தயாரிப்புப் பணிகள் ஏதேனும் ஒரு காரணத்தால் முடங்கிப் போயுள்ளன.
அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ராகுல் என்பவர் தயாரிக்க இருந்தார்.
அஜித்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, அந்தப் படத்தின் மின்னிலக்க, செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமைகளைத் தமக்குத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதற்குத் தயாரிப்பாளர் முதலில் ஒப்புக்கொண்டாலும், படத்தைத் தயாரிக்க போதுமான பணம் இன்றித் தவிப்பதாகத் தகவல்.
பொதுவாக, பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களை வைத்துப் படம் தயாரிக்கும்போது, மின்னிலக்க செயற்கைக்கோள் உரிமத்தை முன்கூட்டியே விற்று கிடைக்கும் தொகையை வைத்துத்தான் படப்பிடிப்பைத் தொடங்குவது வழக்கம்.
அஜித்தின் புதுப்பட உரிமைகளை அவரே பெற்றுக் கொண்டதால், தயாரிப்பாளர் ராகுலுக்குப் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அவர் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்.
“அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே தயாரிப்பாளர் கிடைக்காமல் போனதும், கிடைத்த தயாரிப்பாளரும் அந்தப் படத்தைக் கைவிடும் நிலையில் இருப்பதும் கவலையளிக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் முன்னணி நடிகர்கள் இனி சொந்தப் படம்தான் எடுக்க வேண்டும் போலிருக்கிறது,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இவ்வாறு அங்கலாய்க்க காரணமும் உள்ளது. ரவி மோகன் நடிக்கும் படங்களின் இன்றைய சந்தை மதிப்பு அதிகபட்சம் ரூ.25 கோடிதான். ஆனால், அதிக சம்பளம் கேட்பதால் அவரை வைத்துப் படம் தயாரிக்க பலர் தயக்கம் காட்ட, ரவி மோகனோ, சொந்தப் படம் எடுக்கத் தொடங்கிவிட்டார்.
அவர் தயாரிக்கும் முதல் படமான ‘ப்ரோ கோட்’, ரூ.70 கோடியில் உருவாகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
படத் தயாரிப்புக்காக பல்வேறு தரப்பினரிடம் சிலபல கோடி ரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளாராம் ரவி மோகன். இதனால் அவரது தந்தை எடிட்டர் மோகன் மன வருத்தத்தில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தொடக்க நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.