வாரந்தோறும் ஓடிடி தளங்களில் புதுப் படங்கள் வெளியானவண்ணம் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். சில சமயங்களில் ஒரே வாரத்தில் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இதோ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதுப்படங்களின் பட்டியல்.
‘த கேர்ள் பிரெண்ட்’
தெலுங்கு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, அனு இமானுவேல் நடித்துள்ள காதல் படம் இது. தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் படத்தை வெளியிட்டனர். இந்நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
‘ஸ்டீபன்’
இது மனோதத்துவ திகில் படமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டிசம்பர் 5ஆம் தேதி இப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
‘குற்றம் புரிந்தவன்’
நடிகர்கள் விதார்த், பசுபதி ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம். லட்சுமி பிரியா சந்திரமௌலி கதை நாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இதர தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர். டிசம்பர் 5ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியான நிலையில், முதல் நாளன்றே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம். இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால்தான் திரையுலகம் லாபகரமான துறையாக இருக்கும் என்று கூறியுள்ளார் விதார்த்.
‘டைஸ் ஐரா’
மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நாயகனாக நடித்துள்ள ‘டைஸ் ஐரா’, ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது திகில் படமாக உருவாகியுள்ளது. மோகன்லால் ரசிகர்கள் ஆதரவு கிடைத்திருப்பதால் படம் தாக்குப்பிடித்திருப்பதாகத் தகவல்.
‘அரசையான பிரமபிரசங்கா’
கன்னட மொழியில் வந்த நகைச்சுவைத் திரைப்படம் இது. அப்பாவி இளைஞன் ஒருவர் காதலுக்காக ஏங்குகிறார். ஆனால், பல பிரச்சினைகளைச் சந்திக்கும் அவனுக்கு காதல் ஆசை நிறைவேறியதா? என்கிற கோணத்தில் கதை நகர்கிறது. சன் நெக்ஸ் ஓடிடி தளம் இப்பட்டத்தின் உரிமையை வாங்கியுள்ள நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடியில் வெளியாகியுள்ளது.
‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ’
திருமணத்திற்கு முன்பு புகைப்படங்கள் எடுக்கும்போது நடைபெறும் நிகழ்வுகளை வைத்து அமைக்கப்பட்டுள்ள கதைக்களத்துடன் உருவாகியுள்ளது ‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ’ படம். தெலுங்கில் உருவாகியுள்ள காதல் படம். ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இப்படங்கள் அனைத்துமே ஓடிடி தளங்களுக்கு ஏற்றவை என்பதால் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள் திரை ரசிகர்கள்.

