தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கக்கூடாது: விஷால்

1 mins read
e8b448e3-03f1-436d-a847-e0cd7080772a
விஷால். - படம்: ஊடகம்

‘அட்ஜஸ்ட்மென்ட்’ கேட்டால் செருப்பால் அடியுங்கள் என்று விஷால் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை சென்னை, கீழ்ப்பாக்கத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசியபோது, “80 விழுக்காட்டு பெண்கள் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும்.

பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை.

தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள்.

தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கக்கூடாது. சில உப்புமா கம்பெனிகள் கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாகக் கூறி படம் எடுத்து, பெண்ணை பயன்படுத்திவிட்டு தப்பித்து விடுகின்றன. இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன்,” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்