திரையுலகில் எதையும் முன்கூட்டியே கணிக்க இயலாது என்றும் கதையை ஆர்வத்துடனும் காதலுடனும் சொல்வது மட்டுமே படைப்பாளிகள் கையில் உள்ளது என்றும் நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர், சாத்விகா வீரவள்ளி, ஷ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’.
விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் ஒரு பெண்ணின் உணர்வுபூர்வமான கதையுடன் உருவாகியுள்ள படம் இது.
தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ என்ற பெயரில் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது.
முன்னதாக, இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இது ஒரு தெலுங்குப் படமோ தமிழ்ப் படமோ அல்ல என்றும் இந்தியாவின் எந்தவொரு சிறிய நகரத்திலும் நடக்கக்கூடிய ஓர் அழகான இந்தியக் கதை என்றும் கூறினார் துல்கர் சல்மான்.
“திரைப்படம் மீதான உண்மையான காதலாலும் ஆர்வத்தாலும் உருவாக்கப்பட்ட நேர்மையான படைப்பு இது.
“இப்படத்தின் குறுங்காணொளி வெளியீடு கண்டபோது எனக்கு வந்த பாராட்டுச் செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் ஏதோ பெரிய நட்சத்திரங்களுடன் பிரம்மாண்ட வணிகப் படத்தை எடுத்தது போன்ற உணர்வைத் தந்தன. அதுதான் திரையுலகின் மாயம்.
“எதையுமே முன்பே கணிக்க முடியாது. நாம் சொல்லும் கதையை மக்கள் புரிந்துகொண்டு அரவணைப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே எங்களை வழிநடத்துகிறது.
“குறிப்பாக, இந்தப் படத்தை எங்கள் மகள்கள், சகோதரிகள், குடும்பத்தாருக்காக அர்ப்பணிக்கிறோம்,” என்றார் துல்கர் சல்மான்.
பெண்களின் லட்சியத்தையும் உணர்வுகளையும் பேசும் இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
