தண்ணீருக்குள் மூச்சை அடக்கி நடித்தேன்: ஆர்யா

தண்ணீருக்குள் மூச்சை அடக்கி நடித்தேன்: ஆர்யா

1 of 2
படம்: ஜூம் டிவி
படம்: ஜூம் டிவி

18 Apr 2026 - 3:36 pm

2 mins read

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’.

‘சார்பட்டா பரம்பரை-2’, ரஞ்சித் இயக்கும் மற்றொரு படம் எனப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ‘மிஸ்டர் எக்ஸ்’ படமும் தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என நம்புகிறார்.

ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் குறித்து சமூக ஊடகங்களில் பலர் எதிர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இருந்தாலும், இப்படத்தில் தண்ணீருக்கு அடியில் நடைபெறும் சண்டைக்காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடலின் ஆழமான பகுதியை தத்ரூபமாகத் திரையில் காண்பிக்க, மும்பையில் உள்ள ஒரு ‘டைவிங்’ நீச்சல் குளத்தில் ஏறக்குறைய இருபது அடி ஆழத்தில் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

பொதுவாக ஆறடி ஆழத்திலேயே இத்தகைய காட்சிகள் எடுக்கப்படும் நிலையில், இந்தப் படத்திற்காக 20 அடி ஆழம் வரை செல்ல வேண்டியிருந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஆர்யா.

“குளிர்ந்த நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது. அத்தகைய கடும் குளிரில் உடல் நடுங்குவது இயல்புதான். ஆனால் காட்சியில் உடல் நடுக்கம் தெரியக்கூடாது என்பதால் சுமார் 30 முதல் 40 வினாடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன். இது பெரும் சவாலாக இருந்தது.

“நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, ஒருமுறை தண்ணீருக்கு அடியில் சென்றால் கேமரா குழுவினருடன் சேர்ந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. அதன் பின்னரே நாங்கள் மேலே வருவோம்,” என்று ஆர்யா அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நீருக்கடியில் இருந்த ஒலிப்பெருக்கிகள் மூலம் இயக்குநர் மனு ஆனந்த் வழங்கிய அறிவுறுத்தல்களைக் கேட்டு நடித்தாராம்.

இவ்வளவு சிரமங்களுக்குப் பிறகு திரையில் அந்த காட்சிகளைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்ததாகச் சொல்கிறார். ரசிகர்களும் இக்காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

“என்னதான் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீச்சல்குளக் காட்சிகளைப் படமாக்கினோம் என்றாலும், இதற்கு தனித் துணிச்சலும் தொழில் பக்தியும் தேவை.

“ஆர்யா இயக்குநர்களுக்கான நாயகன். இயக்குநர் நினைப்பதைத் திரையில் கச்சிதமாக வெளிப்படுத்தும் திறமைசாலி அவர்,” என்கிறார் மனு ஆனந்த்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்நடிகர்நடிகைநீச்சல்படப்பிடிப்பு