கெட்ட பெயர் வராமல் தடுக்கவே நடித்தேன்: வைபவி சாண்டில்யா

கெட்ட பெயர் வராமல் தடுக்கவே நடித்தேன்: வைபவி சாண்டில்யா

3 mins read
03e7cbac-741e-4206-a341-54d605569ea0
நடிகை வைபவி சாண்டில்யா. - படம்: ஊடகம்

மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் திரைத் துறைக்குள் நுழைந்ததாகச் சொல்கிறார் நடிகை வைபவி சாண்டில்யா.

தமிழில் ‘சக்க போடு போடு ராஜா’, ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தில் என்னை நம்பி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து விட்டார்கள். தெரிந்தோ, தெரியாமலோ அதில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர், அப்படத்தில் இருந்து விலக என்னால் முடியவில்லை.

ஒப்புக்கொண்ட வேலையைப் பொறுப்பாக முடித்துக்கொடுப்பது முக்கியம் என்பதால் விலகவில்லை. இதனால், கெட்ட பெயரும் வராமல் தடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

‘படம் பிடிக்காமல் வைபவி வெளியேறி விட்டார்’, ‘இந்த நடிகை பிரச்சினைக்குரியவர்’ என்று வெளியுலகில் செய்திகள் பரவுவதைக் காட்டிலும், படத்தில் நடித்து முடித்துவிட்டு இனிமேல் இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்ததாகச் சொல்கிறார்.

கன்னடத்தில் தயாராகி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக இந்தியா முழுவதும் வெளியாகவிருக்கும் ‘மார்ட்டின்’ படத்தைப் பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர், தமிழக வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், தனது திரை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“புனேதான் என் சொந்த ஊர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற தணியாத ஆசை இருந்துவந்தது. எனது ஆசையைப் புரிந்துகொண்ட என் பெற்றோரும் உன் விருப்பப்படி செய் என பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.

“சில விளம்பரங்களில் நடிக்கத் துவங்கி அப்படியே சினிமாவுக்குள் நுழைந்துவிட்டேன்,” என்று சொல்லும் வைபவி, தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் தான் ஏற்றுக்கொள்வது இல்லை என்கிறார்.

தற்போது கதைகள் கேட்பதில் பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். ஒரு கதையை முழுமையாகக் கேட்டு, அது பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறேன்.

சில சமயங்களில் கதையை முழுமையாகச் சொல்லும்படி கேட்டு, பட வாய்ப்பை இழந்த அனுபவமும் உள்ளது என்று கூறுபவர், வாய்ப்பு பறிபோனதற்காக எல்லாம் என்னை நான் சமரசம் செய்து கொள்வதில்லை என்கிறார்.

ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதில் சிறப்பாக நடித்திருந்தால் அடுத்தடுத்து வரக்கூடிய வாய்ப்புகளும் அதே பாணியில்தான் வரும். அதனால்தான் காத்திருந்தாலும் பரவாயில்லை. நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்போம் என காத்திருந்தேன். இதனால்தான் தமிழில் அதிக படங்களில் நடிக்கமுடியாமல் இடைவெளி விழுந்துவிட்டது என்கிறார்.

நடிப்பதற்கு என்று வந்தபிறகு அதுபோல் நடிக்கமாட்டேன், இதுபோல் நடிக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை அனைத்து வேடங்களையும் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகத் தான் பார்க்கிறேன். கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிறார் வைபவி.

எந்த நடிகராக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் முழுக் கதையையும் சொல்லி அவர்களிடம் வேலை வாங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறும் அவர், ரூ.10,000 சம்பளத்துடன் கூடிய வேலைக்குப் போனால்கூட இதுதான் உங்கள் வேலை என்று சொல்லித்தான் வேலை வாங்குவார்கள்.

ஆனால், சினிமா துறையில்தான் நடிகைகளுக்கு கதை சொல்வதிலும் அவர்களுக்கான பாத்திரம் என்ன என்பதைக் கூறுவதிலும் ஓர் அலட்சியம் தென்படுகிறது என குற்றஞ்சாட்டுகிறார் வைபவி.

தற்போது ‘மார்ட்டின்’ பான் இந்தியா திரைப்படத்தில் துருவா சார்ஜாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். 13 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. நடிகர் அர்ஜுன் இந்தப் படத்துக்கான ‌கதையை எழுதியிருக்கிறார். ஏ.பி. அர்ஜுன் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படமாக எடுக்கப்பட்டுள்ளது.

படக் குழுவினர் அனைவருமே நல்ல நண்பர்களாக பழகினர். அந்தப் படத்தின் வெளியீட்டுக்காகத்தான் காத்திருக்கிறேன் என்கிறார்.

கடுமையான உடற்பயிற்சிகளையும் யோகாவையும் விடாமல் செய்து வரும் வைபவி, தான் தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூர்ய நமஸ்காரத்தில் இரண்டு வகை இருப்பதாகக் கூறியுள்ள வைபவி சாண்டில்யா, அவற்றை செய்துகாட்டும் காணொளிகளையும் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்