‘பயத்துடன் நடித்தேன்’

3 mins read
129fe351-5a85-46ee-99d7-f0d327be0cf2
அதர்வா. - படம்: ஊடகம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில், காலஞ்சென்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’.

நவம்பர் 22ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரை அரங்குகளில் இப்படம் வெளியாகும் நிலையில், இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

நிகழ்வில் பேசிய நாயகன் அதர்வா, இயக்குநர் கார்த்திக் நரேனை வெகுவாகப் பாராட்டினார். கார்த்திக் இயக்கிய ‘துருவங்கள் 16’ படத்தைப் பார்த்த நாள் முதல் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமக்கு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார் அதர்வா.

“கார்த்திக் ஒரு காட்சியை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். அது எனக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் எனது உண்மையான இயல்புக்கு நேர்மாறான கதாபாத்திரத்தைத்தான் அவர் கொடுத்தார். பயம் கலந்த ஒருவித மகிழ்ச்சியுடன் கதாபாத்திரத்தை ஏற்றேன். காரணம், கார்த்திக் நரேன் மீது உள்ள நம்பிக்கை.

“உண்மையிலேயே இது ஒரு புதுமையான படம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் என்ன மாதிரியான படம் என யாராலும் வகைப்படுத்த முடியாது,” என்றார் அதர்வா.

இப்படத்தில் சரத்குமார், ரகுமான் போன்ற மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார்.

“துஷ்யந்த், அம்மு அபிராமி என மேலும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தைத் தயாரித்த கருணா, மனோஜ் ஆகியோருக்கும் நன்றி. தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பாகச் செயலாற்றியுள்ளனர்.

“இந்தப் படத்தில் பலவித புது அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, ரசிகர்கள் திறந்த மனதுடன் திரையரங்குக்குச் சென்று படத்தைப் பார்க்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்,” என்றார் அதர்வா.

தொடர்புடைய செய்திகள்

“இந்தப்படத்தின் கதையைப் படித்தபோதே மனதுக்குள் பயம் எட்டிப்பார்த்தது. பிறகு நம்மால் நிச்சயம் நடிக்க முடியும் என எனக்கு நானே அறிவுரை கூறிக்கொண்டேன்.

“சரத்குமாருடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளேன். நானும் அவரும் இணைந்து நடிக்கும் சில காட்சிகளை ஒரே நாளில் படமாக்கினர்.

“நான் சரத்குமாரின் ரசிகன். அவர் நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதேபோல் ரகுமான் நடித்த படங்களையும் நிறைய பார்த்திருக்கிறேன்.

“பூமித்தாய் எப்படி இந்த உலகின் பாரத்தைச் சுமக்கிறாரோ, அதேபோல் கார்த்திக் நரேன் மீது அனைத்து பாரங்களையும் ஏற்றி வைத்துவிட்டு மற்ற அனைவரும் நிம்மதியாகப் பணியாற்றினோம்.

“ஒரு சண்டைக் காட்சியில் முழுமையாக நடித்து முடித்த பின்னர், அக்குறிப்பிட்ட காட்சி இப்படித்தான் திரையில் காண்பிக்கப்படும் என நானாக முடிவு செய்திருந்தேன். ஆனால், படத்தொகுப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர் பார்த்தால், சண்டைக் காட்சி நான் நினைத்ததற்கு முற்றிலும் நேர்மாறாக, மிக அருமையாக இருந்தது. அதுதான் இயக்குநர் கார்த்திக் நரேனின் பாணி.

“இப்படி நாள்தோறும் பல்வேறு அனுபவங்களைத் தந்த படமாக ‘நிறங்கள் மூன்று’ அமைந்தது,” என்றார் அதர்வா.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “மனிதர்களின் இருள்சூழ்ந்த பக்கத்தையும் ஆழமான மனித உணர்வுகளை அலசும் வகையிலும் ‘நிறங்கள் மூன்று’ உருவாகி உள்ளது,” என்றார்.

“அதர்வா முரளி ஒவ்வொரு படத்திலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் புதிய உயரங்களைத் தொடுகிறார்,” என்றும் சரத்குமார் பாராட்டினார்.

“இப்படத்திலும் அதர்வா நடிப்பு நிச்சயம் அனைவராலும் பாராட்டப்படும். ரகுமானின் வித்தியாசமான கதாபாத்திரமும் நடிப்பும் நிச்சயமாக ரசிகர்களைக் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

“கார்த்திக் நரேன் மீதான மரியாதை, வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தின் காரணமாக ரகுமான் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

“நான் இத்தனை ஆண்டுகளில் பல இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர்களின் தனித்திறமையால் ஈர்க்கப்பட்டுள்ளேன். அந்த வகையில், கதைக்கு ஏற்ப புதிய காட்சிகளை உருவாக்குவதில் கார்த்திக் நரேன் திறமையானவர். காட்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதோடு, நடிகர்களின் திறனை வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்த தன்னால் முடிந்தவரை உழைப்பார்.

“இந்தப்படம் திரையரங்குகளுக்குச் செல்லும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,” என்றார் சரத்குமார்.

‘நிறங்கள் மூன்று’ படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்