விஜய்யின் ‘கோட்’ படத்தில் அவரது மகளாக நடித்தவர் அபியுக்தா மணிகண்டன். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள்.
அறிமுகப் படத்திலேயே, யார் இந்த அழகி என்று இளம் ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்துள்ளார் அபியுக்தா.
சட்டம் பயின்று வரும் இவருக்கு, திரைத்துறையின் மீதும் மிகுந்த ஆர்வம் உண்டாம். அதனால்தான் சட்டம் படித்துக்கொண்டே நடிகையாக அறிமுகமானதாகவும் சொல்கிறார்.
“சிறு வயது முதலே திரையுலகில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அம்மா ‘ஃபேஷன்’ நிகழ்ச்சிகளை நடத்துபவர். அந்த துறையில் ராணியைப்போல் வலம்வருபவர். அவரைப் பார்த்துதான் மாடலிங் துறை மீது விருப்பம் ஏற்பட்டது.
“எனக்குள் இருந்த சினிமா ஆசையை மூடி மறைக்க விரும்பவில்லை. பெற்றோரிடம் கூறியபோது சட்டம் படித்து முடித்ததும் நீ விரும்பிய துறையை நீயே தேர்வு செய்யலாம் என்ற சுதந்திரம் தந்தனர்.
“அதுதான் என்னை இப்போது நடிகையாக்கி உள்ளது என்கிறார் அபியுக்தா. இவரது தாயார் பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவராம். அதனால் அபியுக்தாவும் அவரது தந்தையும் சிறு வயது முதலே நடனம் கற்க தொடங்கியுள்ளனர்.
18 வயதில் முறைப்படி அரங்கேற்றமும் செய்துள்ளனர். பியானோ, கீபோர்டு, வாய்ப்பாட்டு என்று மேலும் பலவற்றை இருவரும் கற்று வருகின்றனராம்.
தனது அறிமுகப்படத்திலேயே விஜய் போன்ற உச்ச நடிகருடன் இணைந்ததை பெரிய பாக்கியமாக கருதுவதாகச் சொல்கிறார் அபியுக்தா.
தொடர்புடைய செய்திகள்
“அவரை முதன் முதலாக படப்பிடிப்பு அரங்கில் சந்தித்த அந்த தருணம் இன்னும் என் மனதைவிட்டு அகலவில்லை. அவருக்கே உரிய அந்த அன்பான புன்னகையுடன் வரவேற்றார்.
“விஜய்யுடன் இணைந்து நடிக்கிறோம் என்ற பதற்றம் எனக்கு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அவர் மிகவும் இயல்பாக இருந்தார். ஒவ்வொரு காட்சியை படமாக்கியபோதும் என்னுடன் கலந்து பேசி இப்படிச் செய்யலாமா, அப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறி எனக்குள் இருந்த மன அழுத்தத்தை குறைக்க உதவினார்.
“அவரும் சினேகாவும் மிகுந்த அனுபவசாலிகள். ஆனால் இருவருமே என் மீது அக்கறை கொண்டிருந்தனர். எனது நடிப்பு இயல்பாக இருப்பதாக ரசிகர்கள் கருதி இருந்தால் அதற்கு இவருடைய பெருந்தன்மைதான் காரணம்.
“கிளைமாக்ஸ்’ காட்சியில் நான் கண்ணீர் விட்டு அழ வேண்டும் என்றார் இயக்குநர் வெங்கட் பிரபு. நானும் என்னால் இயன்றவரை யதார்த்தமாக அழுதேன். காட்சி படமாக்கப்பட்டதும் எப்படிமா உன்னால் இயல்பாக எளிதாக அழ முடிந்தது என்று விஜய் கேட்டார்.
“அவ்வளவு பெரிய நடிகர் இதைக் கவனித்து கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் அவ்வாறு கேட்டதை மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்.
“பெற்றோர் இருவருமே கலைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் எனக்கும் இயல்பாகவே கலைகள் மீது ஆர்வம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.
“தொடர்ந்து படிப்பிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்,” என்று பொறுப்பான மகளாகப் பேசுகிறார் அபியுக்தா.

