திரையுலகில் பன்முகக் கலைஞராக வலம்வரும் தனுஷ் இயக்கி அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் `இட்லி கடை’.
அப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையிடப்படுகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் மிகவும் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அருண் விஜய் நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதிலிருந்து சில துளிகள் இதோ.
“ ‘இட்லி கடை’ படத்தைத் தனுஷ் இயக்குகிறார் என்பது தெரிந்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில், இதற்கு முன்னர், அவர் இயக்கிய ‘ராயன்’ படத்தில் கதாபாத்திரங்களை அவர் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றார் அருண் விஜய்.
மேலும், “அவரிடமிருந்து அழைப்பு வருகிறது என்றால் அந்த வேடத்திற்கு ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என நான் புரிந்துகொண்டேன். என்னுடைய பாதை என்னவென்று அவருக்குத் தெரியும். அதுமட்டுமன்றி, திரைக்கதையில் புதுமைகள் செய்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.
“நான் கூறிய அனைத்தையும் நீங்கள் திரையில் பார்க்கப்போகிறீர்கள். அப்படத்தின் கதையும் எனக்குப் பிடித்திருந்தது. நானும் தனுசும் அப்படத்தின் கதை குறித்து 40 நிமிடங்கள் மட்டுமே பேசினோம். இருப்பினும், அக்கதையின் ஆழத்தை எனக்குப் புரியும் வகையில் தனுஷ் கூறிய விதம் என்னை வெகுவாய் கவர்ந்தது.
“எனக்கு என்ன தேவையோ அதைச் சொன்னார். நீங்கள் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள் என்றால் மேலும் சில சுவாரசியங்களைச் சேர்ப்பேன் என்றும் சொன்னார். உடனே நடிக்கத் தயார் எனச் சொல்லிவிட்டேன். எனக்குத் தனுஷ்மீதும் என்மீதும் நம்பிக்கை இருந்தது,” என அவர் கூறினார்.
இதற்கிடையே, படப்பிடிப்பின்போது நடந்த சில சுவையான நிகழ்வையும் அந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டார்.