இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாய் வீட்டுக்குத் திரும்பிய உணர்வு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.
கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான இவர், பின்னர் ‘டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடித்துள்ள ‘விருந்து’ படம் தமிழ், மலையாளம் என, ஒரே சமயத்தில் இரு மொழிகளில் வெளியீடு கண்டுள்ளது.
முன்பெல்லாம் இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு நடித்ததாகவும் தற்போது அனுபவம் கற்றுத்தந்த பலவற்றின் அடிப்படையில் நடிப்பதாகவும் சொல்கிறார் நிக்கி.
“ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு நிறைய யோசிப்பேன். இயக்குநர், அவரது குழு எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதில் முழு நம்பிக்கை ஏற்பட்டால் அதில் நடிப்பேன். இல்லையெனில் எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும் ஒதுக்கிவிடுவேன்.
“குறிப்பிட்ட ஒரு காட்சியில் இயக்குநர் சொல்வதைக் கிளி பிள்ளையைப் போல் திரும்பச் சொல்வேன். அந்த நாள்கள் மலையேறிவிட்டன.
“இப்போது என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் என் நடிப்பில் சேர்த்துக் கொள்வேன். அதற்காக இயக்குநரைப் புறக்கணிப்பதாக அர்த்தமல்ல.
“எனினும் இவ்வாறு தனிப்பட்ட அனுபவங்களை நடிப்பில் வெளிப்படுத்தும்போது பாராட்டு கிடைக்கிறது,” என்று உற்சாகமாகப் பேசுகிறார் நிக்கி.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் வெளியான ‘விருந்து’ படத்தில் கடும் மன அழுத்தம், அதிர்ச்சிக்கு ஆளாகும் பெண்ணாக நடித்துள்ளார் நிக்கி.
இதற்காக தாம் ஓரளவு மெனக்கெட்டாலும், நிக்கி கூறும் சில தகவல்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கிறது.
“என் அனுபவத்தை நடிப்பில் வெளிப்படுத்தியதாக கூறியதால் இது போன்ற பாத்திரங்களில் எவ்வாறு நடிக்க முடிந்தது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
“ஒரு காட்சியைப் படமாக்கத் தொடங்கியது முதல் இயக்குநர் ‘கட்’ என்று சொல்லி முடிக்கும் வரை மட்டுமே நான் நடிக்கிறேன்.
“மற்றபடி, ஒரு படம் முடியும் வரை கதாபாத்திரமாக வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் அந்தக் கதாபாத்திரம் என்னை ஆளுமை செய்வதாகவும் நான் கூறியதே இல்லை.
“இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள ‘பியர்லி’ கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையை படம் முழுவதும் சுமந்து செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதை உணர்ந்திருந்தேன்.
“பியர்லி எந்த நேரத்தில் சிரிப்பாள், எந்த நேரத்தில் தன் மனநிலையை மாற்றிக்கொள்வாள் என்பதை யாராலும் உணர முடியாது. அதே சமயம் அந்த இளம் பெண் எதையும் சடாரென முடிவு செய்து தன் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டாள்.
“இதை தொடக்கத்திலேயே நன்கு புரிந்து கொண்டதால்தான் நடிக்க முடிந்தது. அதனால்தான் கடந்த கால அனுபவங்கள் என் நடிப்பை மெருகேற்றி உள்ளதாக நம்புகிறேன்,” என்கிறார் நிக்கி.
தென்னிந்திய திரையுலகத்தில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது உண்மை என்றாலும், வருங்காலத்தில் கதாநாயகிகளுக்கும் உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என தாம் நம்புவதாகச் சொல்கிறார் நிக்கி.
“கதாநாயகிகளுக்கு திரையில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அவர்கள் தங்களுடைய திறமையைத் திரையில் வெளிப்படுத்த கூடுதல் அவகாசம் தரப்பட வேண்டும்.
“என்னுடைய இந்தக் கருத்து திரை உலகத்துக்கானது மட்டுமல்ல, இதர அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
“எனினும் இதே ரீதியில் சென்றால் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வளர்ச்சி காண மேலும் தலைமுறைகள் காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே இதுபோன்ற சில விஷயங்கள் விரைவாக நடப்பது நல்லது,” என்கிறார் நிக்கி.

