‘உண்மைதானா... வேறு மாற்றம் ஏதும் இருக்காதே...’ என சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல், சந்தானத்தின் அருமையான நகைச்சுவைக்கு ரசிகர்களாக இருப்பவர்களும் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி குறித்துத்தான் சில நாள்களாக ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சிம்புவின் 49ஆவது படத்தில் அவருடன் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சந்தானம் என வெளியான செய்திதான் அது. இந்நிலையில், இத்தகவல் உண்மைதான் எனக் கூறி சந்தேக மேகங்களை விரட்டியுள்ளார் சந்தானம்.
“ஒருநாள் சிம்பு திடீரென தொலைபேசியில் அழைத்து, ‘ஒரு புதுப் படத்தில் நீங்களும் என்னுடன் இணைந்து நடிக்க வேண்டும்’ என்றார்.
“அவர் அப்படிக் கேட்ட பிறகு முடியாது என்று சொல்ல வாய்ப்பே இல்லை. அவர் எதைக் கேட்டாலும், ‘சரி, ஒகே’ என்பதுதான் என்னுடைய பதில். அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் அவரை வைத்திருக்கிறேன். எனது திரையுலகப் பயணத்தின் தொடக்கத்தில் இருந்து அவருக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். அவர் படத்திற்கு என்னை நடிக்கக் கேட்ட சமயத்தில், நானும் அடுத்த ஒரு படம் தொடங்குவதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தேன்.
“அந்தத் தயாரிப்பாளரிடம் ‘மன்னிப்பு’ கேட்டுவிட்டு, இப்போது சிம்பு படத்துக்கு வந்துவிட்டேன். எங்கள் அதிரடியையும் அந்தப் படத்தில் எதிர்பாருங்கள்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் சிம்பு.
சந்தானம் நடிக்கும் மேலும் ஒரு படத்தை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஆர்யா தயாரிக்கிறார். நண்பருக்குப் பெரிய வெற்றியைப் பரிசாக அளிக்க வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார்.
“என் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவர் ஆர்யா. என்னுடைய ஒவ்வொரு படத்தின் நிலவரமும் அவருக்குத் தெரியும். அதேபோல் இருவருமே தனிப்பட்ட, தொழில் ரீதியிலான விஷயங்களை ஒளிவுமறைவு இல்லாமல் பகிர்ந்துகொள்வோம்.
“‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தை முடித்துவிட்டு ஒருநாள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான், அவர் படம் தயாரிப்பது என முடிவானது. நண்பர் கிஷோர் மூலம் நிகாரிகா நிறுவனத்தையும் இந்தப் படத்துக்குள் கொண்டு வந்தார் ஆர்யா.
தொடர்புடைய செய்திகள்
“இதற்கு முன்பு என் படங்கள் சிலவற்றில், நானே தயாரிப்புப் பொறுப்பையும் கவனித்தபோது பதற்றமாக இருக்கும். இந்த முறை அந்த பதற்றத்தை எனக்காக ஆர்யா தன் கையில் எடுத்துக்கொண்டார். நடிப்பில் மட்டும் நான் கவனம் செலுத்தினால் போதும் என்று கூறிவிட்டார். நண்பேன்டா..” என்று ஆர்யாவைப் பாராட்டுகிறார் சந்தானம்.
தொடர்ந்து நகைச்சுவைப் படங்களிலேயே நடிப்பது ஏன் என்று பலரும் கேட்கிறார்களாம். அதற்கும் இந்தப் பேட்டியில் பதில் அளித்துள்ளார்.
“‘தில்லுக்கு துட்டு’ வெற்றிக்குப் பிறகு என்னைப் பார்க்கும் அத்தனை பேரும், ‘இதேபோல் அடிக்கடி ஒரு திகிலும் நகைச்சுவையும் அதிகம் உள்ள படங்களில் நடியுங்கள்’ என்று விரும்பிக் கேட்பார்கள். அதனால்தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வரை அத்தகைய படங்களை உருவாக்கினோம். அதற்கு இளையர்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமானோர் ரசிகர்களாகக் கிடைத்தனர்.
“இப்போது உருவாகி வரும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் வழக்கமான பேய்ப் படங்கள் போல் ஒரு பாழடைந்த கோட்டை, பங்களா என்றெல்லாம் இருக்காது. பல இடங்களுக்குப் பயணிக்கும் கதை இது.
“அடர்த்தியான ஒரு காடு, ஒரு மிரட்டலான தீவு, கதாபாத்திரங்கள் பயணிக்கும் சொகுசுக் கப்பல் என வித்தியாசமான அனுபவங்கள் காத்திருக்கின்றன.