இசைத்துறையில் இது இளையர்களுக்கான காலம் எனலாம். ஒரு காலத்தில் யுவன் சங்கர் பதின்ம வயதிலேயே இசையமைக்கத் தொடங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
பின்னர் ஜி.வி.பிரகாஷ், அனிருத் என்று தொடர்ந்த அந்த வரிசை தற்போது சாய் அபயங்கர், பால்டப்பா அஜிஸ் என்று வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் ‘ஐயையோ’ என்ற பாடலின் மூலம் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிகோலஸ்.
இனி அவர் சொல்வதைக் கேட்போம்.
“நான் அப்பாவின் இசைக்கு தீவிர ரசிகன். அதே போல் ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களும் மிகவும் பிடிக்கும். எனவே இவர்களைப் போன்று நாமும் ஒரு பாடலை உருவாக்க வேண்டுமென திட்டமிட்டேன்.
“சரியாகச் சொன்னால் கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால் அதுபோன்ற பாடல்கள் ஏன் இப்போது வருவதில்லை என்று அடிக்கடி யோசிப்பேன்.
“அதனால் இசைத்தொகுப்பை வெளியிடும் எண்ணம் தோன்றியதுமே நான் விரும்பிய பாடல்களின் சாயலில் நான் இசை அமைக்கும் முதல் பாடல் அமைய வேண்டும் என விரும்பினேன். அதுதான் ‘ஐயையோ’ பாடலாக வெளிப்பட்டுள்ளது.
பாடல் வெளியான அன்று இயக்குநர் கௌதம் மேனன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அருமையான பாடல், இதே போன்று தொடர்ந்து செயல்படு’ என்று வாழ்த்தினார்.
தொடர்புடைய செய்திகள்
மறுநாள் திரு பிரபுதேவாவும் அப்பாவைத் தொடர்புகொண்டு, “நம் சாமுவேல் நிகோலஸா இது... சிறு வயதில் பார்த்தது, அப்போது மிகவும் வெட்கப்படுவார். இப்போது கேமரா முன்பு நடனமாடுகிறாரே,” என்று கூறினாராம்.
“அப்பாவுக்கும் பாடல் பிடித்திருந்தது. வீட்டிலும் ரசித்தனர். இதேபோல் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டுமென அப்பா அறிவுரை கூறினார்.
“தினமும் கைப்பேசியில் தொடர்பு கொண்ட பலரும் என் இசையைப் பாராட்டுகிறார்கள். அதிக எண்ணிக்கையில் குறுந்தகவல்களும் வருகின்றன.
“வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஒரு பாடலுக்கு மெட்டமைத்தபடி இருப்பேன். அதை பல முறை பார்த்த அப்பா, ‘தினமும் சும்மா பாடிக்கொண்டு இருக்கிறாயே, கச்சேரிக்கு வந்து பாடு’ என்றார்.
“அவர் வைத்த குரல் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் முதல்முறையாக கச்சேரிக்கு அழைத்துச் சென்றார். நான் பாடியதைக் கேட்டு பலரும் பாராட்டினார்கள்.
“அதே சமயம் ஒரு தந்தையாக அல்லாமல் அப்பா எப்போதுமே ஓர் இசையமைப்பாளராகத்தான் யோசிப்பார். ஏதாவது பாடலுக்கு எனது குரல் ஒத்துப்போகவில்லை என்றால் சிறிதும் தயங்காமல் வேறு ஒரு பாடகரை அழைத்து பாடவைப்பார்.
“தற்போது நிறைய இளம் இசைக்கலைஞர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்கள். இது மிகவும் அற்புதமான வளர்ச்சி என்பேன். தமிழ் ரசிகர்கள் இப்போது ஆங்கில, ‘கே-பாப்’ பாடல்களை ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.
“நான் ரசிகர்களைக் குறை கூறவில்லை. நான் இப்போது என்ன மாதிரியான பாடல்களை கேட்க விரும்புகிறேன் என்பதன் வெளிப்பாடுதான் ‘ஐயையோ’.
“நான் சாய் அபயங்கர், பால் டப்பா, அசல் கோளாறு ஆகியோரின் ரசிகன். அப்பா இசையில் பால் டப்பா இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். எல்லாருமே திறமைசாலிகள்தான்,” என்கிறார் சாமுவேல் நிகோலஸ்.